

“ஓமந்தூரார் மருத்துவமனையானது தலைமைச் செயலகம் ஆகாது”: "கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னால் தினந்தோறும் 400 முதல் 500 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுவந்தார்கள், ஆனால் தற்போது 1500 முதல் 2000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகிறார்கள். எனவே, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையானது தலைமைச் செயலகமாக மாற வாய்ப்பு இல்லை" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஆதியோகி சிலைக்கு முன் அனுமதி பெறவில்லை: தமிழக அரசு: கோவை ஈஷா யோகா ஃபவுண்டேஷனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கட்டிடங்களைக் கட்டுவதற்காக முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெறவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குநர் ஆய்வு செய்ய வேண்டும். அதில் சம்பந்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை என்று தெரியவந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ராக்கெட்ரி’, ‘கடைசி விவசாயி’ படங்களுக்கு தேசிய விருதுகள்: 69-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது. சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை ‘கடைசி விவசாயி’ பெற்றுள்ளது.
‘கடைசி விவசாயி’ படத்துக்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு ஸ்பெஷல் மென்ஷனில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ‘ஹோம்’ படத்துக்காக இந்திரன்ஸுக்கும் இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஆண் நடிகர் விருதுக்கு புஷ்பா படத்துக்காக அல்லு அர்ஜூன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த பெண் நடிகருக்கான விருதுகளை கங்குபாய் படத்துக்காக ஆலியா பட்டும், மிமி படத்துக்காக கீர்த்தி சனோனும் பெறுகின்றனர். சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு திரைப்படம் பிரிவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ தேசிய விருது வென்றுள்ளது.
பி.லெனின் இயக்கிய சிறந்த கல்வி திரைப்படமாக ‘சிற்பங்களின் சிற்பங்கள்’ திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கருவறை’ என்ற ஆவணப் படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்தில் செய்தி ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு: சந்திரயான்-3 தொடர்பான செய்தி சேகரிப்பு பணிக்காக புதன்கிழமை காலை நெல்லையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு காரில் சென்றுள்ளனர் புதிய தலைமுறை செய்தி குழுவினர். பணியை முடித்துக் கொண்டு இரவு நெல்லை திரும்பும் போது நாங்குநேரி டோல்கேட் அருகில் அவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தில் செய்தி ஒளிப்பதிவாளர் சங்கர் உயிரிழந்தார். அவருடன் காரில் பயணித்த செய்தியாளர் உட்பட மூவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சாலை விபத்தில் உயிரிழந்த புதிய தலைமுறை சேனலின் செய்தி ஒளிப்பதிவாளரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
நிலவின் தென் துருவத்தில் உலாவரும் பிரக்யான்: சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் கலன் நிலவில் புதன்கிழமை வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், லேண்டரில் இருந்து சாய்தள பாதையின் வழியாக வெளிவந்த பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் உலா வரத் தொடங்கியுள்ளது. இதனை இஸ்ரோ ஆய்வு மையம் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
WFI-ஐ சஸ்பெண்ட் செய்த உலக மல்யுத்த கூட்டமைப்பு: இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்துள்ளது உலக மல்யுத்த கூட்டமைப்பு. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்த தவறிய காரணத்துக்காக சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, "உரிய நேரத்தில் தேர்தலை நடத்தாததால் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உலக மல்யுத்த கூட்டமைப்பு இடைநீக்கம் செய்துள்ளது. இதனால் இந்திய வீரர்கள் நமது தேசிய கொடியின் கீழ் விளையாட முடியாது. ஒரு பாலியல் வேட்டையாளர் எம்.பி. விளையாட்டை தனது காலுக்கு கீழே போட்டு மிதிக்க அனுமதித்ததுக்காக பாஜகவுக்கும், மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்கும் அவமானம்" திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சாம்பியன் ஆனார் கார்ல்சன்; பிரக்ஞானந்தா 2-ம் இடம்!:உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார், முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியுற்று இரண்டாம் இடம் பிடித்தார். செஸ் உலகக் கோப்பை போட்டியின் இளம் வயது இறுதிச்சுற்றுப் போட்டியாளர் என்கிற சரித்திரத்தை அவர் படைத்துள்ளது கவனிக்கத்தக்கது.
இமாச்சலின் குலு மாவட்டத்தில் நிலச்சரிவு: இமாச்சலப்பிரதேசம் குலு மாவட்டத்தில் மழை காரணமாக வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவினால் கட்டிடங்கள் அட்டை வீடுகள் போல சரிந்து விழும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
“திமுகவினர் மீதான வழக்குகளை மட்டும் மீண்டும் விசாரிப்பது ஏன்?”: "எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற நீதிபதியான ஆனந்த் வெங்கடேஷ், திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் குறித்த வழக்குகளை மட்டும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பது ஏன்?" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து எடுத்துள்ளது குறிப்பிடத்தக்க்து.
‘பிரிக்ஸ்’அமைப்பில் புதிதாக 6 நாடுகள் இணைப்பு: வளரும் நாடுகளின் அமைப்பான ‘பிரிக்ஸ்’ குழுவில் அடுத்த ஆண்டு முதல் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமிரகம், ஈரான் உள்ளிட்ட ஆறு நாடுகள் புதிதாக இணைப்படும் என்று தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா வியாழக்கிழமை தெரிவித்தார். இந்த அமைப்பில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.