Published : 24 Aug 2023 07:59 PM
Last Updated : 24 Aug 2023 07:59 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூருக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற கரும்பு விவசாயிகள் இன்று தமிழக முதல்வரை சாலையோரமாக நின்று நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 268 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சை வழியாக மயிலாடுதுறை செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார்.
முதல்வர் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருகை தரும்போது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவதாக விவசாயிகள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இதை அடுத்து போலீசார் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கருப்புக் கொடி காட்ட விடாமல் சாலியமங்கலம் அருகே சாலையோரமாக நின்று முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி, இன்று மதியம் சாலியமங்கலத்தில் கரும்பு விவசாயிகளை சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “திருஆரூரான் சக்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 100 கோடி. அதேபோல் விவசாயிகளின் பெயரில் மோசடியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் ரூ.300 கோடி கடன் பெற்றுள்ளது. அந்தக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 268 நாட்களாக போராடி வருகிறோம். இந்நிலையில், இதன் ஒரு பகுதியாக போராடி வரும் விவசாயிகள் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT