Published : 07 Dec 2017 11:25 AM
Last Updated : 07 Dec 2017 11:25 AM
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் நினைவிடம் அருகே நினைவு மண்டம் எழுப்பக் கூடாது என கூறியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன், எம்ஜிஆரை சிறப்பிக்கும் வகையில் அவரது பெயரில் ஆஸ்கருக்கு நிகரான விருது ஒன்றை அறிவிக்க வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் சுவாமிநாதன் கூறியது: தமிழக அரசு சார்பில் இப்போது நடத்தப்படும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கூட்டங்களில் அவருக்குப் புகழ் சேர்ப்பதை விட்டுவிட்டு சொந்தப் பிரச்சினைகளைப் பற்றியே முதல்வரும் துணை முதல்வரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஊழலை எதிர்த்துதான் திமுக-வை விட்டு வெளியேறினார் எம்ஜிஆர். அப்படியிருக்கையில் அவருக்காக நடத்தப்படும் விழாக்களில், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலலிதாவின் படத்தைப் பெரிதாகப் போடுகிறார்கள். இது ஏற்புடையது அல்ல.
பெரியார் நூற்றாண்டைக் கொண்டாடிய எம்ஜிஆரும் அண்ணா நூற்றாண்டைக் கொண்டாடிய கருணாநிதியும் அவர்கள் இருவருக்கும் புகழ் சேர்க்கும் விதமாக பல திட்டங்களை செயல்படுத்தினர். அதுபோல, எம்ஜிஆருக்கும் இப்போதுள்ள அதிமுக அரசு புகழ் சேர்க்க வேண்டும். அதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கும் சென்னையிலுள்ள பன்னாட்டு விமான முனையத்துக்கும் (எண் 4) எம்ஜிஆர் பெயரைச் சூட்ட மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா சாலையில் எம்ஜிஆரால் நிறுவப்பட்ட அண்ணா சிலையில் இருந்து எம்ஜிஆர் நினைவிடம் வரை உள்ள சாலைக்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்ட வேண்டும். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர் எம்ஜிஆர். எனவே, அவரது புகழை காலத்துக்கும் சொல்லும் வகையில், ஆஸ்கர் போன்ற சர்வதேச அளவிலான விருதை வழங்க தமிழக அரசு அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இந்த விருதும், அளிக்கப்படும் பரிசின் மதிப்பும் ஆஸ்கரை காட்டிலும் மதிப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் இல்லத்தில் நினைவு ஸ்தூபி எழுப்பி, அங்கு மாஸ்கோ செஞ்சதுக்கம் போல நட்சத்திரப் பின்னணியில் அவருடைய உருவம் ஜொலிக்கும்படி செய்ய வேண்டும். மெரினா பீச்சுக்கு எம்ஜிஆர் பெயரைச் சூட்டுவதற்கு இதுதான் சரியான தருணம். அதேசமயம், எம்ஜிஆர் நினைவிடம் அமைந்திருக்கும் வளாகத்தில், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் எழுப்புவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
தேவைப்பட்டால், ஜெயலலிதாவுக்கு வேறு இடத்தில் மண்டபம் கட்டிக்கொள்ளட்டும். இந்த விவகாரம் தொடர்பாக நானும் நீதிமன்றத்தை நாட இருக்கிறேன். எனது சொந்த ஊரான சிதம்பரத்தில் எம்ஜிஆருக்கு எனது சொந்த செலவில் சிலை வைக்க தமிழக முதல்வரிடம் அனுமதி கேட்டேன். இதுவரை எந்தப் பதிலும் இல்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT