Published : 24 Aug 2023 05:13 AM
Last Updated : 24 Aug 2023 05:13 AM

சந்திரயான்-3 வெற்றியில் `நாமக்கல் மண்': குன்னமலை, சித்தம்பூண்டி கிராம மக்கள் மகிழ்ச்சி

சந்திரயான்-3 விண்கலம் சோதனைக்காக பரமத்திவேலூர் அடுத்த குன்னமலையில் `அனார்த்தசைட்' மண் எடுக்கப்பட்ட பகுதி.

நாமக்கல்/சேலம்: சந்திரயான்-3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இதன் சோதனை ஓட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட மண், நாமக்கல் மாவட்டம் குன்னமலை, சித்தம்பூண்டி கிராமங்களில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சந்திரயான்-3 விண்கலம் ஏறத்தாழ 40 நாட்கள் பயணத்துக்குப் பின்னர், நிலவின் தென்துருவத்தில் நேற்று மாலை வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்நிலையில், கடந்த 2019-ல் சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியபோது, அங்கு தரையிறங்குவது தொடர்பாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்துக்கு, நிலவின் மேற்பரப்பில் உள்ள `அனார்த்தசைட்' வகை மண் தேவைப்பட்டது.

இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டதில், நிலவின் மேற்பரப்பில் உள்ள அனார்த்தசைட் பாறை வகைகள், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் அருகேயுள்ள சித்தம்பூண்டி, குன்னமலை கிராமங்களில் இருப்பது, சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறையினர் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதையடுத்து, சித்தம்பூண்டி, குன்னமலை கிராமங்களில் இருந்து 50 டன் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அங்கு அனார்த்தசைட் பாறை மற்றும் மண் மூலம் அமைக்கப்பட்ட தளத்தில், ரோவர் வாகனத்தின் ஓடுதிறன் பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல, தற்போது சந்திரயான்-3 விண்கலத்தின் சோதனை ஓட்டத்துக்கும் இந்த மண் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குன்னமலை, சித்தம்பூண்டி கிராம மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக குன்னமலை கிராம மக்கள் கூறியதாவாது: சந்திரயான்-2 விண்கலத்தின் சோதனை ஓட்டத்துக்காக குன்னமலை, சித்தம்பூண்டியில் இருந்து மண் எடுக்கப்பட்டது. நிலவில் உள்ள மண்ணும், இங்குள்ள மண்ணும் ஒரே வகையைச் சேர்ந்தவையாக இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. இந்த மண் சந்திரயான்-3 சோதனை ஓட்டத்துக்கும் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருப்பதுடன், நிலவில் சந்திரயான்-3 லேண்டர் கலன் வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சேலத்துக்கு பெருமை: சந்திரயான்-3 விண்கலத்தின் இன்ஜின் சேம்பரில் பொருத்துவதற்காக ஐசிஎஸ்எஸ்- 1218- 321 என்ற குளிரூட்டப்பட்ட ஸ்டெயின்லஸ் ஸ்டீல் தகடு, சேலம் இரும்பாலையில் இருந்து வழங்கப்பட்டது. சந்திரயான் திட்டத்துக்காக சேலம் இரும்பாலை தொடர்ச்சியாக மூன்று முறை பங்களிப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x