Published : 24 Aug 2023 07:09 AM
Last Updated : 24 Aug 2023 07:09 AM
திண்டுக்கல்: உலகில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முதல் 2 சதவீத விஞ்ஞானிகளின் பட்டியலை, அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜான்லொன்னிடிஸ் மற்றும் அவரது குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பட்டியலில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள, 2 லட்சத்துக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவிலிருந்து 3,500-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இதில் இடம் பிடித்துள்ளனர்.
2022-ம் ஆண்டுக்கான பட்டியலில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணிதவியல் துறைப் பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியம், வேதியியல் துறைப் பேராசிரியர்கள் எம்.ஜி.சேதுராமன், எஸ்.மீனாட்சி, இயற்பியல் துறைப் பேராசிரியர் கே.மாரிமுத்து ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பேராசிரியர் பி.பாலசுப்பிரமணியம், தெளிவற்ற தர்க்க அணுகுமுறைகளைப் பயன்படுத்தி தரம் குறைந்த படங்களை உயர்தரப்படமாக மாற்றுதல், கிரிப்டோகிராபி மற்றும் செயலாக்கத் தொழில்நுட்பம் மூலம் நோயாளியின் மூளையில் ஏற்படும் அதிர்ச்சியைக் கண்டறியும் முறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
பேராசிரியர் எம்.ஜி.சேதுராமன், தாவர மூலப் பொருட்களில் இருந்து வரும் சேர்மங்களைக் கொண்டு உலோக அரிப்புகளைத் தடுக்கும் காரணிகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
பேராசிரியர் எஸ்.மீனாட்சி,கழிவுநீரில் இருந்து நச்சுத்தன்மையுள்ள ப்ளூரைடு. காரியம், குரோமியம், பாதரசம் மற்றும் நச்சுகளை, உறிஞ்சுதல் மூலமாக நீக்கும் முறைகளை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
பேராசிரியர் கே.மாரிமுத்து, பூமியின் அரிய தாதுக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடிகள் மூலம், வெள்ளை ஒளி மற்றும் லேசர் ஒளி உமிழ்வதற்கான ஆய்வு மற்றும் அபாயகர கதிர்வீச்சைத் தடுப்பதற்கான கண்ணாடிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
2019, 2020, 2021-ம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இவர்கள் இடம் பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து நான்காவது முறையாக 2022-ம் ஆண்டுக்கான பட்டியலிலும் இவர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT