Published : 24 Aug 2023 06:04 AM
Last Updated : 24 Aug 2023 06:04 AM

முதல்வரின் காலை உணவு திட்டத்தின்கீழ் சென்னையில் மேலும் 65 ஆயிரம் மாணவர்கள் பயன்பெற நடவடிக்கை

சென்னை: முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சென்னையில் மேலும் 65 ஆயிரம் மாணவர்கள் பெற நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மாநகராட்சி பகுதிகளில் திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் ஆகிய 4 மண்டலங்களில் முதற்கட்டமாக 37 தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரைபயிலும் 5 ஆயிரத்து 941 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுவழங்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக எர்ணாவூர்,ஆல் இந்தியா ரேடியோ நகர் (மேற்கு) தொடக்கப் பள்ளியில் பயிலும் 62 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி கடந்தபிப்.1-ம் தேதி முதல் 38 தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு 6 மைய சமையற்கூடங்கள் மூலமாக காலை உணவு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

35 மைய சமையற்கூடங்கள்: மேலும், அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் உள்ளிட்ட இதர பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 65 ஆயிரத்து 30 மாணவர்கள் கூடுதலாக பயன்பெறும் வகையில் காலை உணவு வழங்கும் திட்டத்தை விரிவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்துக்கு 35 மைய சமையற்கூடங்களில் காலை உணவு சமைப்பதற்காக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அம்மா உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பணியமர்த்தப்பட்டு, அவர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

காலை உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்குவதைஅனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த உணவு தயாரிப்பதற்கான மையசமையற்கூடங்களுக்கு தேவையான பாத்திரங்கள், எரிவாயு உருளைகள் மற்றும் உணவு சமைப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பள்ளிகளுக்கு உணவு எடுத்துச்செல்லும் வாகனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த வாகனங்களில் மட்டுமே உணவை எடுத்துச் சென்று, உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். மேலும், இந்தவாகனங்கள் செல்லும் வழித்தடங்களை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி இணை ஆணையர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், வட்டார துணை ஆணையர்கள் எம்.பி.அமித்,எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான்,எம்.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x