Published : 11 Dec 2017 10:58 AM
Last Updated : 11 Dec 2017 10:58 AM
காவல் நிலையங்களில் நடப்பதை போலீஸ் அதிகாரிகள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தங்கள் செல்போனில் கண்காணிக்கும் வகையில் நவீன செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸார் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிப்பது வழக்கம். குற்றத்தின் தன்மையைப் பொறுத்து விசாரணையின் தன்மையும் மாறுபடும். இதில், சில நேரங்களில் மனித உரிமை மீறல் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுவது உண்டு. விசாரணையின்போது சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
தமிழகத்தில் 2011-ம் ஆண்டு 6 பேரும், 2012-ல் 7 பேரும், 2013-ல் 15 பேரும் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்தில் கடந்த 2014-ல் அதே பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி (16) என்ற சிறுவனிடம் குற்றப்பிரிவு ஆய்வாளர் புஷ்பராஜ் விசாரித்தபோது, துப்பாக்கி குண்டு கழுத்தில் பாய்ந்து சிறுவன் உயிரிழந்தார்.
காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வருபவர்களிடம் சில போலீஸார் கண்ணியக் குறைவாக நடந்துகொள்வதாகவும் புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, பெரும்பாலான காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு வருகிறது.
தற்போது முதல்முறையாக, சென்னை காவல் நிலையங்களில் நடக்கும் நிகழ்வுகளை போலீஸ் அதிகாரிகள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே தங்கள் செல்போன் மூலம் நேரடியாக கண்காணிக்கும் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சைதாப்பேட்டை உட்பட 20 காவல் நிலையங்களில் நடக்கும் நிகழ்வுகளைத் துணை ஆணையர் முதல் காவல் ஆணையர் வரை உள்ள அதிகாரிகள் தங்களது செல்போனில் நேரடியாக 24 மணி நேரமும் பார்க்க முடியும்.
இதுகுறித்து காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, ‘‘காவல் நிலையங்களில் நடக்கும் நிகழ்வுகளை நவீன தொழில்நுட்பம் மூலம் செல்போனிலேயே நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விரை வில் அனைத்து காவல் நிலையங்களையும் இதேபோல கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படும். இதன்மூலம் சட்டம் ஒழுங்கை மேலும் சிறப்பாக்க முடியும்’’ என்றார்.
கூடுதல் காவல் ஆணையர் ஒருவர் கூறியபோது, ‘‘காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் எங்களது செல்போனில் தெரியும்படி நவீன செல்போன் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளோம்.
இதன்மூலம் காவல் நிலையங்களில் நடக்கும் நிகழ்வுகளை 24 மணி நேரமும் கண் காணிக்க முடியும். உரையாடலைக்கூட துல்லியமாக கேட்க முடியும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT