Published : 24 Aug 2023 12:43 AM
Last Updated : 24 Aug 2023 12:43 AM
சென்னை: சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. சந்திராயன் நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர் "இந்தியா நிலவில் உள்ளது" என்று அறிவித்தார்.
சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியவரும், சந்திரயான்-3 திட்ட இயக்குனருமான தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது "தமிழகத்துக்கு வரும்போது உங்களை கண்டிப்பாக பார்க்க வருவேன்" என்று வீரமுத்துவேலிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். தொலைபேசியில் பேசும் வீடியோ அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது. முன்னதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் வீரமுத்துவேலை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
'அறிவியல் தமிழர்' வீரமுத்துவேல் அவர்களை வாழ்த்தி மகிழ்ந்த தருணம்!#Veeramuthuvel #Chandrayaan3#Ch3 pic.twitter.com/B87pQ4WQxM
வீரமுத்துவேல் பின்னணி: இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் சந்திரயான்-3 விண்கல பயணத்தின் திட்ட இயக்குநராக இருப்பவர் வீரமுத்துவேல். இவர் விழுப்புரத்தை சேர்ந்தவர். இவரது தந்தை பழனிவேல், ரயில்வே ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
1978-ல் பிறந்த வீரமுத்துவேல், விழுப்புரத்தில் உள்ள ரயில்வே பள்ளியில் பள்ளிப் படிப்பையும், பின்னர், அங்குள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமாவும் படித்தார்.
பின்னர், சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பி.இ. பட்டப் படிப்பை முடித்தார். திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில் (ஆர்இசி) எம்.இ. படிப்பை முடித்தார்.
கடந்த 2004-ல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக கடந்த 2019 டிச.9-ம் தேதி நியமிக்கப்பட்டார்.
சந்திரயான்-2 திட்டப் பணியிலும் பணியாற்றிய வீரமுத்துவேல், அப்போது நாசாவுடன் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார்.
சந்திரயான்-1 திட்ட இயக்குநராக பொள்ளாச்சி அடுத்த கோதவாடியை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2 திட்ட இயக்குநராக சென்னையை சேர்ந்த முத்தையா வனிதா பணியாற்றிய நிலையில், சந்திரயான்-3 திட்ட இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த வீரமுத்துவேல் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT