Published : 23 Aug 2023 09:10 PM
Last Updated : 23 Aug 2023 09:10 PM
புதுச்சேரி: நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கிய நேரலைக் காட்சியை கடற்கரைச்சாலையில் பொதுமக்கள் நேரலையில் கண்டு ரசித்து மகிழ்ந்தனர். இந்தியர்கள் பெருமைப்படும் சாதனையை இஸ்ரோ நிகழ்த்தியுள்ளதாக முதல்வர் ரங்கசாமி பாராட்டியுள்ளார்.
நிலவில் சந்திரயான் 3 தரையிறங்கும் நேரலையானது ஒளிபரப்பானது. புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி கோரிமேட்டிலுள்ள அவரது இல்லத்தில் இருந்தபடியே நேரலையை பார்த்து ரசித்து மகிழ்ந்தார். அதன்பின் அவர் விடுத்த அறிக்கையில், நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3ன் லேண்டரை வெற்றிக்கரமாக தரையிறக்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. மனிதர்களால் ஆராயப்படாத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் முதல் வெண்கலம் இது என்ற பெருமையை இஸ்ரோ ஏற்படுத்தியுள்ளது.
இது இந்தியாவின் விண்வெளிப் பயண லட்சியம். தொழில்நுட்ப வல்லமை மற்றும், துணிச்சலை உலகுக்கு நிருபிப்பதாக அமைந்துள்ளது. இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ளும் வகையிலான இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு: சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கியதன் நேரலை, லாசுப்பேட்டை கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் கல்வித்துறை சார்பில் மின்னணு திரையில் ஒளிபரப்பப்பட்டது. இதில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்களுடன் அமர்ந்து பார்த்தார்.
கடற்கரையில் மக்கள் ஆரவாரம்: புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு காட்டப்பட்ட நேரலையை பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய் ஜெ.சரவணன் குமார் ஆகியோர் பொதுமக்களுடன் அமர்ந்து பார்த்தனர். சந்திரயான்-3 நிலவில் தடம் பதித்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்த நிலையில், அங்கிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் எழுந்து கரகோஷமிட்டு தேச உணர்வை வெளிப்படுத்தினர்.
சிறார்கள் தேசியக் கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சிக்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர் செல்வம், "இஸ்ரோ நிலவில் சந்திரயான் 3 லேண்டரை தரையிறக்கிய திட்டத்தில் இரு தமிழர்கள் இடம் பெற்றிருப்பது பெருமையாகும். எந்த நாடும் சாதிக்க முடியாத சாதனையை நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர்" என்றார். புதுச்சேரியில் பல்வேறு பள்ளிகளிலும் சந்திரயான் 3 நிலவில் தடம் பதித்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டு, மாணவ, மாணவியர் பெற்றோருடன் பார்த்து மகிழ்ந்தனர்.
சந்திரயான்-3 வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், "இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டிக்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மாபெரும் வரலாற்று சாதனையான சந்திராயன்-3 விண்கலம் மூலம் நிலவில் தடம் பதித்தது விக்ரம் லேண்டர். நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றது நம் இந்தியா திருநாடு.
நம் இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்த்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், சந்திராயன்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்தி அதன் செயல்பாடுகளை கண்காணித்து நிலவில் தடம்பதிக்க பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகள், பணியாளர்கள் மற்றும் பங்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT