Published : 23 Aug 2023 05:50 PM
Last Updated : 23 Aug 2023 05:50 PM
மதுரை: வருமான வரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் கரூர் திமுகவினரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் உறவினர்கள் வீடுகளில் மே 25-ல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு கூடிய திமுகவினர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கி சம்மன் நகல், அரசு முத்திரைகள், பென் டிரைவ் ஆகியவற்றை பறித்துச் சென்று, அதிலிருந்து தகவல்களை அழித்ததாக கரூர் போலீஸில் திமுகவினர் மீது வருமான வரித்துறையினர் புகார் அளித்தனர்.
இப்புகாரின் பேரில் திமுவினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களுக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்து 15 பேரின் ஜாமீனை ரத்து செய்து நீதிமன்றத்தில் சரணடைய நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி செல்வம், பால்ராஜ், லாரன்ஸ், விக்னேஷ், சதீஷ்குமார், கனகராஜ், கிருஷ்ணன், பிரபு, ரூபேஸ், அருண், ஜோதிபாசு, பூபதி, குணசேகரன், தங்கவேல், பாலசுப்பிரமணியன் ஆகியோர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் கோரினர். ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 15 பேரும் உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இதனை நீதிபதி தனபால் விசாரித்தார். 15 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி இன்று உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT