Published : 23 Aug 2023 03:51 PM
Last Updated : 23 Aug 2023 03:51 PM

பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் பரிசீலிக்கப்படுமா?

சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகரில், பவானி ஆறு மற்றும் மாயாறு சேருமிடத்தில் கட்டப்பட்டுள்ள அணை.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்குள் சென்று வீணாக அரபிக்கடலில் கலக்கும் நீரை, பவானிசாகருக்கு கொண்டு வரும் வகையில், பாண்டியாறு - மாயாறு இணைப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகரில், பவானி ஆறு மற்றும் மாயாறு சேருமிடத்தில் கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை மூலம் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இதோடு, ஏராளமான கூட்டுக்குடிநீர் திட்டங்கள், விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ஆகியவற்றுக்கு பவானிசாகர் அணையின் நீர் இருப்பே ஆதாரமாக உள்ளது. அணையில் 105 அடி வரை, 32.8 டிஎம்சி நீரைத் தேக்க முடியும்.

அதிகரிக்கும் நீர் பற்றாக்குறை: நீலகிரி மாவட்டத்தில் குந்தா பகுதிகளில் உற்பத்தியாகும் பவானி ஆறும், கூடலூர் - முக்கூர்த்தி மலைப்பகுதிகளில் உருவாகும் மாயாறும், பவானிசாகர் அணையில் சேர்கின்றன. இங்கிருந்து பவானி ஆற்றில் நீர் திறக்கப்பட்டு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுகிறது. உபரி நீர், பவானி கூடுதுறையில் காவிரியில் கலக்கிறது.

பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து, ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள நிலங்களுக்கு பாசனத்துக்கு தேவையான நீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதோடு, புதிய குடிநீர் திட்டங்கள் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களால் நீரின் தேவை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பவானிசாகர் அணைக்கான நீர் வரத்தை அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு தேவையான நீரை பெறும் வகையில், பாண்டியாறு - மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகளிடம் தற்போது வலுத்துள்ளது.

கூடலூரை அடுத்த ஓவேலி பகுதியில் ஓடும் பாண்டியாற்றினை
பார்வையிடும் குழுவினர்.

ஆய்வு செய்த குழுவினர்: இந்த திட்டத்துக்கான சாத்தியம் குறித்து, ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தலைமையில், கீழ்பவானி முறைநீர்ப்பாசனக் கூட்டமைப்பு இணைச் செயலாளர் பா.மா.வெங்கடாசலபதி, சமூக ஆர்வலர் காசிபாளையம் வேலுச்சாமி, நீலகிரி மாவட்ட மவுண்டாடன் செட்டி சமுதாய சங்க ஆலோசகர் கி.ஆர்.கிருஷ்ணன், கூடலூர் பகுதி சமூக ஆர்வலர்கள் ஆசிரியர் நடராஜன், எம்.எஸ்.ஆண்டி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து அ.நே.ஆசைத்தம்பி கூறியதாவது: பவானிசாகர் அணைக்கு வரும் பவானி, மோயாறு ஆகியவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும், பாண்டியாறு-புன்னம்புழா நீர்ப்பிடிப்புப் பகுதிகளையும், பசுமைமிக்க புல்வெளிக் குன்றுகள், ஆழமான பள்ளத்தாக்குகள், சுனை நீர் அருவிகள், சிற்சிறு ஓடைகள் அவை உற்பத்தியாகும் இடங்கள் ஆகியவற்றை வாகனம் மூலமும், பல மைல்கள் நடந்து சென்றும் குழுவாக பார்வையிட்டோம்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்தில் இந்தப்பகுதிகள் அதிகமாக உள்ளன. மங்குலிப்பாலம், கூடலூர் 1-ம் மைல், வேடன் வயல், மணலி கொல்லி, பாடந்துறை, சுண்டவயல் ஆகிய பகுதிகளின் வழியே ஓடும் ஓடைகளிலும், சிறு ஆறுகளிலும், இந்த வறட்சியிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பன்றிக்கொல்லி, ஊசிமலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் ஓடைகள் ‘குண்டு கூவ’ என்ற பள்ளத்தாக்கில் பெருத்த சத்தத்துடன் பாய்ந்தோடுகிறது.

கடலில் கலக்கும் நீர்: கூடலூர் நகராட்சி நுழைவு வாயிலில் உள்ள 'இரும்புப்பாலம்’ என்னுமிடத்தில் இரண்டு பெரிய ஓடைகள் ஒன்று சேர்ந்து 'புன்னம்புழா’ என்ற காட்டாறாக ஓடுகிறது. ஓவேலி பேரூராட்சிப் பகுதிகளிலும், மலைக்குன்றுகளிலும் உற்பத்தியாகும் ஆறு 'பாண்டியாறு’ எனப்படுகிறது.

ஆராட்டுப்பாறை என்ற இடத்தில், பாண்டியாறு, புன்னம்பழா ஆகியவை ஒன்று சேர்ந்து காட்டாறாக பெருக்கெடுத்து ஓடி கேரளா பகுதிக்குள் நுழைந்து 'சாலியாறு’ என்ற பெயரில், எந்தப் பாசனத்திட்டமும் இல்லாமல் வீணாக அரபிக்கடலில் கலக்கிறது. வறட்சியான இந்த காலகட்டத்திலும், ஓடைகள், சிறு ஆறுகள் மூலம் 2,000 கன அடி தண்ணீர் வீணாக கடலை நோக்கிச் செல்வதை பார்த்தோம். இந்த வகையில், 14 டிஎம்சி நீர் வீணாகக் கடலில் கலப்பதாகவும் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

கூடலூர் அருகில் உள்ள இரும்பு பாலம் பகுதியில், பாண்டியாற்றில் கலப்பதற்காக
கோடைக்காலத்திலும் வற்றாமல் ஓடும் ஓடை நீர்.

அரசுகளிடையே பேச்சு: இந்தப் பாண்டியாறு தண்ணீரை, பவானிசாகரில் கலக்கும் மாயாற்றுடன் இணைத்தால், நீர் பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பயன்படும். இதற்காக, தேவைப்படும் இடங்களில் அணை கட்டியோ, மோட்டார் மூலம் பம்ப் செய்தோ, மலைகளைக் குடைந்து சுரங்கம் வெட்டியோ, ராட்சச கான்கிரீட் பைப்புகள் மூலமாகவோ, இந்த நீரை மாயாற்றில் சேர்த்து, பவானிசாகர் அணைக்கு சென்று சேரச் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே, தமிழக - கேரள அரசுகள் இத்திட்டம் குறித்து பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ள நிலையில், உடனடியாக மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த திட்டம் தொடர்பாக 2004-ம் ஆண்டு தமிழகம் மற்றும் கேரள முதல்வர்களிடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தெரிவிக்கும் அதிகாரிகள், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இரு மாநில அரசு செயலர்கள் முன்னிலையிலும் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகத் தெரிவித்தனர். கேரளாவுக்கு மின்சாரம், தமிழகத்துக்கு நீர் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, பாண்டியாறு நீரினை மாயாற்றுக்கு திருப்ப வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: பவானி ஆற்றில் இருந்து எடுக்கப்படும் நீரைக் கொண்டு, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,045 குளம், குட்டைகளை நிரப்பி, நீர் செறிவூட்டும் திட்டமாக, அத்திக்கடவு -அவிநாசி திட்டம், ரூ.1,756 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், 24 ஆயிரம் ஏக்கர் நிலமும் பாசனம் பெறவுள்ளது. இத்திட்டப்பணிகள் 98சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், சோதனை ஓட்டத்துக்கே நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட வேண்டுமென்றால், பவானிசாகர் அணைக்கான நீர் வரத்தை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

முதல்வர் அறிவிப்பாரா? - மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரியின் கிளைநதியான பவானி ஆற்றில் இருந்து, 6 டிஎம்சி நீரை காவிரிக்கு வழங்க வேண்டிய நிர்பந்தம் தமிழக அரசுக்கு உள்ளது. இதோடு, எதிர்கால குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு பார்த்தால், பாண்டியாறு - மாயாறு இணைப்புத்திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து, தமிழக அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவுள்ள நிலையில், அதே விழாவில், பவானிசாகர் அணையின் நீர் ஆதாரத்தைப் பெருக்கும் பாண்டியாறு- மாயாறு இணைப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொங்கு மண்டல விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x