Published : 23 Aug 2023 10:00 AM
Last Updated : 23 Aug 2023 10:00 AM

தாம்பரம் மாநகராட்சியில் வசூலாகும் நிதி எங்கே போகிறது..? - வெள்ளை அறிக்கை கேட்கும் கட்சிகள்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி இதுவரை எவ்வளவு வரி வசூல் செய்துள்ளது, வசூலாகும் பொது நிதியை என்ன செய்கிறார்கள், அந்த நிதியில் என்னென்ன பணிகள் நடந்துள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். தாம்பரம் மாநகராட்சி மன்றம் அமைக்கப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது.

ஆனால், மக்கள் பணி சரிவர நடப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. திமுகவினர் இரு கோஷ்டிகளாக செயல்படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர். குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகள்கூட நிறைவேற்றப்படுவது இல்லை. முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாதது, தேங்கும் குப்பை கழிவுகள் என தாம்பரம் மாநகராட்சியில் உள்ள சுகாதார பிரச்சினைகளின் பட்டியல் நீள்கிறது.

தவிர, அரசு அலுவலகங்களில் புரோக்கர் ஆதிக்கம் அதிகம். மாநகராட்சியில் சொத்து வரி, பிறப்பு - இறப்பு சான்று வாங்குவது, வருவாய் துறையில் சான்றிதழ் வாங்குவது, ரேஷன் அட்டை பெறுவது என பலவிதமான பணிகளுக்கும், அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் பணத்தை நகர்த்தினால்தான் காரியம் நடக்கிறது என்று பாதிக்கப்பட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

ஜி.சங்கர்

இதுபற்றி அவர்கள் கூறியதாவது: மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சேலையூர் ஜி.சங்கர் (அதிமுக): தாம்பரம் மாநகரில் ஆக்கிரமிப்புக்கு பஞ்சம் இல்லை. எளியவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அக்கறை காட்டும் மாநகராட்சி, வலியவர்களின் ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்வது இல்லை.

ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையும் உள்ளது. பல சாலைகளில் ஆக்கிர மிப்புகளை அகற்றினாலே, நெரிசலுக்கு தீர்வு காணலாம். பாதாள சாக்கடை திட்டப் பணிகள், 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முழுமை அடையாததால், சுகாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது.

100 முதல், 150 சதவீதம் வரை வரியை உயர்த்திவிட்டு, மக்கள் பணி மேற்கொள்ள கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்குவது இல்லை. வசூலாகும் பொது நிதியை என்ன செய்கிறார்கள். மாநகராட்சி இதுவரை எவ்வளவு வரி வசூல் செய்துள்ளது, அந்த பொது நிதியில் என்னென்ன பணிகள் நடந்துள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அடிப்படை வசதிகளை நிறைவேற்றாதது, சுகாதார சீர்கேடு என மாநகராட்சியின் செயல்பாடுகளை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

சந்தானம்

மூத்த சமூக ஆர்வலர் வி.சந்தானம்: பொதுவாக, தாம்பரம் மாநகராட்சியின் செயல்பாடு மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. ஒருசில இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவிட்டு மிகப் பெரிதாக மழைநீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இதில் கழிவுநீர்தான் செல்கிறது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் கால்வாய்கள் அடைபட்டு கிடக்கின்றன.

இதனால் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. நகராட்சியாக இருந்தபோது இந்த கால்வாய்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டன. அந்த பணி தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. கொசு மருந்து தெளிப்பு நடைபெறுவதாக தெரியவில்லை. கொசு உற்பத்தி பெருகி எங்கு பார்த்தாலும் டெங்கு காய்ச்சலை பார்க்க முடிகிறது. பூங்காக்கள் பராமரிப்பு இல்லை.

எரிவாயு மயானம் ஓரளவுக்கு திருப்திகரமாக செயல்படும் நிலையில், புதை மயான பராமரிப்பு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சாலை ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கின்றன.

சொத்துகள் பெயர் மாற்றம், கட்டிட வரைபடம் அனுமதி பெறுவது சிரமமாக உள்ளது. தேவையற்ற காலதாமதம் செய்யப்படுவது, லஞ்சத்துக்கு வழிவகுக்கிறது. மாடுகள், நாய்கள் தொல்லையால் பல விபத்துகள் நடந்தும் துரித நடவடிக்கை இல்லை. கடந்த ஆண்டு நாய் துரத்தியதால் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து ஒரு பெண் உயிரிழந்தார்.

தாம்பரம் மாநகராட்சியாக மாற்றப்பட்ட பிறகும், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை போன்ற இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்படவில்லை. வீரராகவன் ஏரி, புத்தேரி போன்ற சிறு ஏரிகள் கழிவுநீர் கலந்து, பராமரிப்பின்றி பாழாகி வருகின்றன. விளையாட்டு மைதானங்கள், சமூகநல கூடங்கள், வணிக மார்க்கெட் வசதி எதுவுமே இல்லை. குரோம்பேட்டை மேற்கு பகுதி வார்டுகளில் பூங்காக்கள் எதுவுமே இல்லை.

குரோம்பேட்டை மண்டல அலுவலகத்தில் வாடகைக்கு விடப்பட்டுள்ள இடத்தை காலி செய்து, நியூ காலனி பகுதியில் ஒரு சமூகக்கூடம் வேண்டும். மாமன்ற கூட்டத்தில் கோஷ்டி பூசல் காணப்படுவது ஆரோக்கியமானது அல்ல. பெரும்பாலான வார்டுகளில் குப்பை அகற்றும் பணியை தனியார் செய்கின்றனர்.

இது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என தெரியவில்லை. ஊழியர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் சரியான சம்பளம் தருவது இல்லை என்ற புகார் அடிக்கடி வருகிறது. குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மெட்ரோ, குடிநீர் வாரியத்தால் போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது. பல்லாவரத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட வேண்டிய திட்டம், 10-12 ஆண்டுகளுக்குள்ளேயே பழுதடைந்துள்ள தால் மக்கள் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியாக மாறினால் எல்லா வசதியும் கிடைக்கும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. தெரு விளக்கு பணி மட்டும் திருப்தியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரூ.250 கோடி வளர்ச்சி பணி: தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கூறியதாவது: தாம்பரம் மாநகராட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக, சாலை, குடிநீர், பூங்கா மேம்பாடு, மழைநீர் கால்வாய், எரிவாயு தகனமேடை, நீர்நிலை மேம்பாடு, குடிநீர், பாதாள சாக்கடை வாகனம், சுகாதார மையம், கழிப்பறை, திடக்கழிவு மேலாண்மை திட்டம், எல்இடி, மின்விளக்கு, கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பணிகள் ரூ.250 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் 80 சதவீத பணி முடிந்துள்ளது. பாகுபாடு பார்க்காமல் அனைத்து வார்டுகளிலும் பணிகளை செய்து வருகிறோம். அதனால்தான், தொடங்கப்பட்ட ஓராண்டிலேயே தாம்பரம் மாநகராட்சி 2-ம் இடம் பிடித்து, முதல்வரிடம் இருந்து விருது பெற்றுள்ளோம். அரசியல் செய்வதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x