Published : 07 Dec 2017 10:15 AM
Last Updated : 07 Dec 2017 10:15 AM
தமது வயிற்றைக் கழுவுவதற்காக அடுத்த வீட்டு கழிப்பறையைக் கழுவும் மனிதர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அடுத்தவரது கழிப்பறையை சுத்தம் செய்து அதில் வரும் வருமானத்தில் ஏழைகளுக்கு உதவுகிறார் லோகநாதன்.
1,200 குழந்தைகளுக்கு உதவி
கோவை, அப்பநாயக்கன்பட்டியில் வெல்டிங் பட்டறை வைத்திருக்கும் லோகநாதன் 51 வயதைக் கடக்கிறார். இவரது பட்டறையில் சம்பளத்துக்கு ஆட்கள் வேலை செய்கிறார்கள். ஆனால், இவர் தினமும் தனியார் ஆஸ்பத்திரியின் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு எழை களுக்கு குறிப்பாக ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுகிறார். அப்படி, இதுவரை 1,200 குழந்தைகளின் கல்விக்கு உதவியிருக்கிறது இவர் கழிப்பறை சுத்தம் செய்து சேகரித்த பணம்.
“எனக்கு பத்து வயசிருக்கும் போதே எங்க அப்பா இறந்துட்டாரு. இளநீர் வியாபாரம் செஞ்சு என்னை வளர்த்து ஆளாக்குனது எங்க அம்மா தான். என்கூட பிறந்தவங்க எல்லாம் ஓரளவுக்குப் படிச்சிருக்காங்க. ஆனா, என்னைய ஆறாம் வகுப்புக்கு மேல எங்கம்மாவால் படிக்க வைக்க முடியல. ஓரளவுக்கு வெவரம் தெரிஞ்சதும் நானும் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். கிடைச்ச வேலையெல்லாம் பார்த்துட்டு கடைசியா, வெல்டிங் வேலை பார்த்தேன்.
அப்பவே நினைப்பேன்
அப்ப, தொழில் நிமித்தமா வட மாநிலங்களுக்கு அடிக்கடி போவேன். அப்பெல்லாம், வடநாட்டு சனங்க சப்பாத்திக்கும் ரொட்டித் துண்டுக்கும் படுற கஷ்டத்தை கண்ணால பார்த்துருக்கேன். அவங்கள ஒப்பிடும்போது நம்ம எவ்வளவோ தேவலாம்னு நினைச்சுக்குவேன். அதேசமயம், இந்த மாதிரியான மக்களுக்கு நாமும் ஏதாச்சும் உதவணும்னு அப்பவே நினைப்பேன். அதைத்தான் இப்ப செஞ்சுட்டு இருக் கேன்” என்று சொல்லும் லோகநாதன், கழிப்பறை சுத்தம் செய்யும் பணிக்கு வந்தது குறித்தும் பேசினார்.
“சமயம் கிடைக்கிறப்ப எல்லாம் சைக்கிள் மிதிச்சு வீடு வீடாப் போயி, உபயோகப்படுத்தாத துணி மணிகளை சேகரிப்பேன். பிறகு, அதை அநாதை இல்லங்களுக்குக் கொடுப்பேன். அப்ப, நான் வேலை பார்த்துட்டு இருந்த ஒர்க்ஷாப் முதலாளி என்னோட இந்த சேவையைப் பார்த்து நெகிழ்ந்துட்டார். அந்த ஒர்க்ஷாப் கழிப்பறையை சுத்தம் செய்ய தினமும் ஒரு ஆள் வருவார். ஒருநாள், ‘இந்த வேலைய நான் செய்யுறேன் முதலாளி.. நீங்க அவருக்குக் குடுக்கிற சம்பளத்தை எனக்குக் குடுங்க. அதை வெச்சு ஏழைக் குழந்தைகளுக்கு உவுவேன்’னு சொன்னேன். இதக்கேட்டு முதலாளி பதறிட்டார், ‘சீனியர் வெல்டரா இருந்துக்கிட்டு நீ போய் இந்த வேலைய செய்யுறதா..’ன்னு கேட்டார். ஒரு வழியா அவரச் சமாதானப்படுத் தினேன். ‘சரி, உன் இஷ்டம்’னு சொல்லிட்டுப் போயிட்டார்.
பாராட்டிய கலெக்டர்
அன்னையிலருந்து, தினமும் என் வேலையெல்லாம் முடிஞ்சதும், ஒர்க்
ஷாப் கழிப்பறையை கழிவிட் டுத்தான் வீட்டுக்குக் கிளம்புவேன். அதுக்காக மாதா மாதம் முதலாளி குடுத்த 400 ரூபாயை பேங்குல தனிக் கணக்கு ஆரம்பிச்சு போட்டுட்டு வந்தேன். அப்படியே அக்கம் பக்கத்து ஒர்க்ஷாப் கழிப்பறைகளையும் சுத்தம் செய்து அந்த வருமானத்தையும் பேங்குல போட்டேன். மூவாயிரத்துக்கு மேல இருப்பு சேர்ந்துட்டா, அதை எடுத்து ஆதரவற்றோர் இல்லங் களுக்கு குடுத்துருவேன்.
ஒருசமயம், கோவை காந்திமாநகர்ல அரசு ஆதரவற்றோர் இல்லக் கட்டிடம் இடிஞ்சு விழுந்துருச்சு. அந்த இல்லத்துக்கு உதவி செய்யுறதுக்காக மூவாயிரம் ரூபாய் செக்கை எடுத்துட்டுப் போயி கலெக்டர்கிட்ட குடுத்தேன், அப்ப கலெக்டரா இருந்த முரு கானந்தம் சார், என்னைய பாராட்டுனதோட இல்லாம, இதை பத்திரிகைகளுக்கும் சொல்லிட்டார். அதுவரை வெளியில் தெரியாம இருந்த என்னோட இந்த வேலை அப்பத்தான் ஊரு முழுக்க தெரிஞ்சிருச்சு.
20 ஆண்டுகளாக தொடரும் சேவை
‘இருந்திருந்து இப்படி கக்கூஸ் கழுவித்தான் சேவை செய்யணுமா.. நம்ம சாதி சனம் என்ன நினைப்பாங்க?’ன்னு என் மனைவி சசிகலா கேட்டா. இதுதான் முதலீடு இல்லாத தொழில்னு சொல்லி அவளை ஒரு வழியா சமாதானப்படுத்தினேன். அதுலருந்து அவளும் என்னோட சேவைக்கு ஒத்துழைக்க ஆரம்பிச்சுட்டா”என்று முடித்தார் லோகநாதன்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த சேவையைத் தொடரும் லோகநாதன் தனது உழைப்பில் மகனை எம்.பி.ஏ., படிக்க வைத்திருக்கிறார். மகள் சி.பி.எஸ்.சி பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கிறார். லோகநாதனின் சேவையைப் பாராட்டி கோவை மாவட்ட நிர்வாகம் இரண்டு முறை இவருக்கு சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி கவுரவித்தது. கழிப்பறை சுத்தம் செய்வது பிடிக்காததால் லோகநாதனை விட்டு விலகியிருக்கிறாராம் அவரது மகன்.
நிறையப் பேருக்கு உதவணும்
சொந்தமாக சிறிய அளவில் ஒரு வெல்டிங் பட்டறையை தொடங்கியிருக்கும் லோகநாதன், இப்போது தனியார் மருத்துவனை ஒன்றின் கழிப்பறைகளைச் சுத்தம் செய்து, தனது சேவைக்கு பொருளீட்டுகிறார். அந்த மருத்துவமனையின் மருத்துவர் முத்துக்குமார் நம்மிடம் பேசுகையில், “மூணு வருசம் முன்னாடி இந்த மருத்துவமனையை சின்னதா தொடங்கினேன். அப்ப, இங்க இந்த வேலைக்கு வந்தார் லோகநாதன். இப்ப மூணு மாடியா வளர்ந்துருச்சு. இப்பவும் ஒருநாள் தவறாம இங்க வந்து கழிப்பறைகளைச் சுத்தம் செஞ்சுட்டுப் போறார்” என்றார்.
நாம் சென்றபோது, கள்ளப்பாளையம் கிராமத்தில் முதியவர் ஒருவரின் வீட்டுக்கு கல்நார் கூரை அமைத்துக் கொண்டிருந்தார் லோகநாதன். மற்றவர்கள் கூலி அதிகமாகக் கேட்டதால், ‘பொருளை மட்டும் வாங்கிக் கொடுங்கள்.. நான் கூலி இல்லாமல் இதை செய்து தருகிறேன்’ என்று சொல்லி இந்த வேலையில் இறங்கினாராம் லோகநாதன்.
“சொந்தமா வெல்டிங் பட்டறை வெச்சதுல கொஞ்சம் சிரமம் தான். இருந்தாலும் ஆடு, மாடுகள் இருக்கதால ஓரளவுக்கு சமாளிக்க முடியுது. இதுபோல, இன் னும் நிறைய ஆஸ்பத்திரிகள்ல கழிப்பறைகளை சுத்தம் செஞ்சு, இன்னும்நிறைய பணம் சம்பாதிக்கணும்; அதவெச்சு இன்னும் நிறையப் பேருக்கு உதவணும்” லோகநாதனின் அடிமனதிலிருந்து வந்து விழுகின்றன வார்த்தைகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT