Published : 23 Aug 2023 05:46 AM
Last Updated : 23 Aug 2023 05:46 AM
புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் உரிய நியமன நடைமுறைகளை பின்பற்றி அர்ச்சகர்களை நியமிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து அங்கு அர்ச்சகராக பணிபுரிந்து வந்த முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ‘‘ஒருகோயிலின் ஆகமம் மற்றும் பூஜைமுறைகளில் தேர்ச்சி பெற்ற யாரையும் அர்ச்சகராக நியமிக்கலாம்’’ என தீர்ப்பளித்து இருந்தார்.
மேல் முறையீடு: இந்த தீர்ப்பை எதிர்த்து முத்துசுப்பிரமணிய குருக்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமைநீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை செப்.22-க்கு தள்ளி வைத்துள்ளனர்.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குநீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வள்ளியப்பனும், தமிழக அரசு தரப்பில் மூத்தவழக்கறிஞர் ஜெய்தீப்குப்தா மற்றும் அறநிலையத்துறை வழக்கறிஞர்கள் டி.குமணன், என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் உரிய நியமன நடவடிக்கைகளை பின்பற்றி அர்ச்சகர்களை நியமிக்கலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டனர். மேலும், சேலம்சுகவனேஸ்வரர் கோயில் அர்ச்சகர்நியமனம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளமேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டு நடவடிக்கை களை மேற்கொள்ளலாம் எனவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT