Published : 23 Aug 2023 09:24 AM
Last Updated : 23 Aug 2023 09:24 AM
ராமேசுவரம்: சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணுப் படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவிலிருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19, யுவான் வாங்க் 5 ஆகிய உளவு மற்றும் போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளன. கடந்த வாரம் ஹய் யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத் தில் 2 நாட்கள் நங்கூரமிட இலங்கை அரசு அனுமதி வழங்கியது.
சீனாவின் உளவு மற்றும் போர்க் கப்பல்களின் மூலம் 750கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும். அதன்படி, இலங்கைக்கு மிகஅண்மையில் உள்ள இந்தியாவின் ஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம், கல் பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளது. இதனால், சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், சீனாவின் மற் றொரு கப்பலான ஷின் யான்-6 அக்.25-ம் தேதி இலங்கைக்கு வர உள்ளதாகவும், இந்த கப்பல் 17 நாட்கள் முகாமிட்டு இலங்கை கடற் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இலங்கை கடற்படை உறுதிப்படுத்தி உள்ளது.
இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. அது போல இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்தியா 3.5 பில்லியன் டாலர் கடனை வழங்கி உள்ளதுடன் எரிபொருள், மருந்துகள், அரிசி, பால் பவுடர் மற்றும் உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவி உள்ளது.
எனினும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து சீன உளவு கப்பல்களுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் இலங்கை - இந்தியாவுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி இலங்கையில் உள்ள ஊடகங்களில் தற்போது விவாதப் பொருளாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT