Published : 12 Dec 2017 02:03 PM
Last Updated : 12 Dec 2017 02:03 PM
ஒக்கி புயுலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சந்தித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நலம் விசாரித்தார்.
புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை, பனித்திட்டு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், மணிகண்டன் பிரபு, அருள்ராஜ், கந்தநாதன், ஆனந்த் ஆகிய 5 மீனவர்கள் கேரளாவில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர். அப்போது ஒக்கி புயலில் சிக்கிக் கொண்டதைத் தொடர்ந்து இவர்களது படகு லட்சத்தீவில் ஒதுங்கியது.
8 நாட்களாக தங்கியிருந்த அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு கடந்த 10-ம் தேதி புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டனர். கடந்த 8 நாட்களாக கடலில் இருந்த மீனவர்களின் உடல் சுகவீனம் மற்றும் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர்கள் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை முதல்வர் நாராயணசாமி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்ததோடு, விவரங்களைக் கேட்டறிந்தார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் சமுக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், '' கர்நாடகா, குஜராத், கேரளா மாநிலங்களின் நிர்வாகிகளிடம் பேசி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பேரிடர் மீட்புத் துறையின் மூலம் நிவாரணம் வழங்குவது குறித்து,சேதமடைந்த படகுகளுக்கு பாதிப்பிற்கேற்ற நிவாரணம் வழங்குவது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT