Published : 23 Aug 2023 06:20 AM
Last Updated : 23 Aug 2023 06:20 AM

அதிமுக பெண் கவுன்சிலரை கடத்தியதாக கைதான 3 இளைஞர்கள் மீதான குண்டர் தடுப்பு சட்டம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

: நிலத்தகராறு முன்விரோதம் காரணமாக கும்மிடிப்பூண்டி அதிமுக பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மகனை துப்பாக்கி முனையில் கடத்தியதாக கைதான 3 இளைஞர்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பல்லவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர். இவரது மனைவி ரோஜா (45), கும்மிடிப்பூண்டி பஞ்சாயத்து யூனியன் 1-வது வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் ஜேக்கப் கல்லூரியில் படித்து வருகிறார்.

கடந்த ஜனவரியில் ஒரு கும்பல் ரமேஷின் வீடு புகுந்து ரோஜா, ஜேக்கப் இருவரையும் துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் சென்றது. அன்று மாலையே சத்தியவேடு பகுதியில் அந்த கும்பல் தங்களை இறக்கிவிட்டு சென்றதாக கூறி ரோஜாவும், ஜேக்கப்பும் பத்திரமாக வீடு திரும்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (26), அவரது நண்பர்கள் சந்தோஷ் (27), நவீன் (24), பாஸ்கர் (30) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டார். இதில், பாஸ்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை அறிவுரைக் குழுமம் ரத்து செய்தது.

இதையடுத்து, சுரேந்திரன், சந்தோஷ், நவீன் ஆகியோர், தங்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வி.ஆர்.கமலநாதன், கே.எஸ்.ஆறுமுகம், சி.அறிவழகன் ஆகியோர் ஆஜராகி, “மனுதாரர்களுக்கு எதிராக இந்த வழக்கு தவிர வேறு எந்த குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை.

சுரேந்திரன் குடும்பத்தாருக்கு சொந்தமான நிலத்தை அதிமுக பிரமுகரான ரமேஷ் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குறைந்த விலைக்கு வாங்கியுள்ளார். எஞ்சிய நிலத்தையும் தன்னிடமே விற்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால், கோபமடைந்த சுரேந்திரன் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார். உரிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் இந்த 3 பேரும் இயந்திரத்தனமாக குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்” என வாதிட்டனர்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆட்சேபம் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுதாரர்களுக்கு எதிரான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளது என கூறி அதை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x