Published : 26 Dec 2017 10:44 AM
Last Updated : 26 Dec 2017 10:44 AM

நேரடித் தெளிப்பில்சாதித்துக்காட்டிய ஒய்சூல் கருணை!- பிலிப்பைன்ஸ் இவரை மதிக்கிறது.. தமிழகம் இவரை மறக்கிறது!

றட்சியிலும், டெல்டா உள்ளிட்ட வேளாண் மாவட்டங்களில் விவசாயிகள் ஓரளவு தாக்குப்பிடித்து நிற்கிறார்கள். என்றால் அதற்கு அவர்கள் கடைபிடித்த நேரடி விதைத் தெளிப்பு முறையும் ஒரு காரணம். வேதாரண்யத்தைத் தவிர்த்து ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்துக்கு இந்த நேரடித் தெளிப்பு முறையை முறைப்படி அறிமுகம் செய்து அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தவர் ஒய்சூல் கருணை.

ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில்

இன்றைக்கு பல இடங்களில் தண்ணீர் மற்றும் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க நேரடித் தெளிப்பு முறையில் விவசாயம் செய்கிறார்கள். இதன் பரிணாம வளர்ச்சியாக வேளாண் விதைப்பு இயந்திரங்களும் வந்துவிட்டன. ஆனால், இத்தனைக்கும் அடித்தளம் போட்டுக் கொடுத்து நம்பிக்கையை விதைத்த சாமானியர் திருத்துறைப்பூண்டி ஒய்சூல் கருணை என்பது பெரும்பாலான விவசாயிகளுக்கே தெரியாது.

முன்பு, நேரடி விதைப்பு முறை அங்கொன்றும் இங்கொன்றுமாக வழக்கத்தில் இருந்தது. ஆனால், நேரடி விதைப்பு செய்வதால் சரியான சாகுபடி கிடைக்கும் என்பதற்கான உத்தரவாதம் இல்லாததால் அப்போதுஇதை யாரும் முழுமையாகப் பின்பற்றத் தயங்கினார். வேதாரண்யம் பகுதியானது காவிரித் தண்ணீரும் சரியாகப் போய்ச் சேராத பகுதி என்பதால் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் இந்தப் பகுதியில் மட்டும் நேரடி விதைப்பு முறை சிறிய அளவில் இருந்தது.

கருணையின் வயலில்..

இந்த நிலையில் 1987-ல், பருவமழை பொய்த்துப்போய் இப்போது போலவே டெல்டாவின் குறுவை சாகுபடியை பாதித்தது. அப்போது, ஒருபோக சம்பாவையாவது சாகுபடி செய்திட முடியுமா என்ற அச்சத்துடன் விவசாயிகள் நாட்களை நகர்த்தினர். ஆனால், மற்ற விவசாயிகளைப் போல துவண்டுவிடாமல், நேரடித் தெளிப்பு செய்து, அதில் வளமான சாகுபடியை எடுத்துக்காட்டினார் ஒய்சூல் கருணை.

அந்த வருடம் நவம்பர் 9-ல் திறக்கப்பட்ட மேட்டூர் தண்ணீருக்காக காத்திருக்காமால் ஜூன் மாதமே 12 ஏக்கரில் நேரடியாக விதை நெல்லை தெளித்து சாகுபடியைத் தொடங்கினார் ஒய்சூல். அவ்வப்போது வந்து தூறிவிட்டுப் போன மழையே அந்த நெல்லை முளைக்க வைக்கப் போதுமானதாக இருந்ததால் ஆகஸ்ட் மாதமே நெற்கதிர்கள் முகம்காட்டத் தொடங்கின. காவிரிக்காக காத்திருந்த சக விவசாயிகள், கருணையின் வயலில் கதிர்விட்டு நின்ற நெல்மணிகளைக் பார்த்து வியந்தார்கள்.

இந்த விஷயத்தை அப்போதைய வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ஆண்டனியின் கவனத்துக்குக் கொண்டு சென்றார் காவிரிப் பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதன். அதன் பிறகு தான் மற்ற விவசாயிகளையும் நேரடித் தெளிப்பு முறையை பின்பற்றும்படி சிபாரிசு செய்தது தமிழக வேளாண்துறை. அன்றைக்கு ஒய்சூல் கருணையின் மூலமாக வெளியுலகத்துக்கு பரவலாக்கப்பட்ட நேரடித் தெளிப்பு முறைதான் இப்போது டெல்டா விவசாயிகளுக்குக் கைகொடுத்துக் கொண்டிருக்கிறது.

வங்கிகள் கடன் வழங்க மறுத்தன

ஒய்சூல் கருணையின் நேரடித் தெளிப்பு முறை குறித்து மன்னார்குடி ரெங்கநாதன் நினைவுகூர்ந்தார். “குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் முன்பெல்லாம் நடவு முறையை மட்டுமே நம் பக்கத்து விவசாயிகள் பெரிதும் நம்பிக் கொண்டிருந்தார்கள். ஒய்சூல் கருணையின் சாகுபடி சாதனையை பார்த்துவிட்டு நானே வியந்தேன். சிலர், ‘இது எப்படி சாத்தியம்?’ என்றார்கள். ஒரு சிலர், நம்பிக்கை வைத்து அதே ஆண்டில் நேரடித் தெளிப்பு முறையில் இறங்கினார்கள். ஆனால், விதிகளைக் காரணம் காட்டி நேரடித் தெளிப்பு சாகுபடிக்கு வங்கிகள் கடன் வழங்க மறுத்துவிட்டன.

இந்த நிலையில், அடுத்த ஆண்டும் உரிய நேரத்தில் நமக்கு காவிரி தண்ணீர் வராததால், அரசே நேரடித் தெளிப்பு முறையை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தது. இதற்காக, வேளாண் துறை முதன்மைச் செயலாளர் ஆண்டனி தலைமையில் மன்னார்குடியில் அப்போது விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போதைய தஞ்சை ஆட்சியர் மச்சேந்திரநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், ‘நேரடித் தெளிப்புக்கும் வங்கிகள் கடன் வழங்க வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிலிப்பைன்ஸ் அங்கீகாரம்

அதன்படிதான், இன்றுவரை நேரடித் தெளிப்புக்கு வங்கிகள் கடன் வழங்கிவருகின்றன” என்று சொன்ன ரெங்கநாதன், “கடந்த ஆண்டு ஜூலையில் ஒய்சூல் கருணை காலமாகிவிட்டார். நேரடித் தெளிப்பு என்ற ஒரு சிக்கனமான சாகுபடி முறையை அறிமுகம் செய்து சாதித்த அவரை அரசு அங்கீகரிக்கவில்லை. அவரை கவுரவிக்கும் விதமாக, நேரடித் தெளிப்பு முறைக்கு ஒய்சூல் கருணையின் பெயரைச் சூட்ட வேண்டும். வேளாண் சம்பந்தப்பட்ட முக்கிய இடங்களிலும், கோவை வேளாண் பல்கலைக்கழகத்திலும் அவரது உருவப்படத்தை திறக்க வேண்டும்” என்றார்.

தமிழக அரசு ஒய்சூல் கருணையை அங்கீகரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் ஒய்சூல் கருணையின் படத்தை வைத்து அவரை அங்கீகரித்துள்ளனர். இதை, தான் அங்கு சென்றிருந்தபோது பார்த்து வியந்ததாகக் கூறும் நெல் இரா.ஜெயராமன், “மறக்கப்பட்டுவிட்ட ஒய்சூல் கருணையின் பெயரை மீண்டும் இந்த மண்ணுக்கு நினைவுபடுத்தி அவரது புகழை நிலைத்திருக்கச் செய்யவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது” என்கிறார்.

எங்களுக்கும் வருத்தம்

ஒய்சூல் கருணையின் புதல்வர்கள் லியாகத் அலியும், இதயத்துல்லாவும் நம்மிடம் பேசுகையில், “எங்க அத்தா, சாதித்துக் காட்டிய நேரடித் தெளிப்பு முறையை மற்றவர்கள் பின்பற்றிய போதும், பேட்டிகளில் அவரே சொன்னபோதும் எங்களுக்கு அதன் அருமை தெரியவில்லை. நாங்களே அவரது வழியில் விவசாயம் செய்துபார்த்த பிறகுதான் அருமை புரிகிறது.

நேரடித் தெளிப்பு மட்டுமல்ல.. மழை வெள்ளத்தின் போது, ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்டவும், தண்ணீரில் மூழ்கியிருக்கும் பயிரைக் காப்பது குறித்தும் அத்தா சொல்லிக் கொடுத்த யுத்திகள்தான் இப்போதும் எங்களைக் காக்கின்றன. விவசாயத்துக்கு இப்படி யொரு அருமையான உத்தியைக் கற்றுத்தந்த ஒரு சாமானியனுக்கு அரசு உரிய அங்கீகாரம் அளிக்கவில்லையே என்ற வருத்தம் எங்களுக்கும் இருக்கிறது” என்று சொன்னார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x