Last Updated : 03 Dec, 2017 10:06 AM

 

Published : 03 Dec 2017 10:06 AM
Last Updated : 03 Dec 2017 10:06 AM

இணையதளம் மூலம் நூதன முறையில் நகை, பணம் திருடும் கும்பல்: சென்னையில் கேரள தனிப்படை போலீஸார் விசாரணை

இணையதளம் மூலம் நூதன முறையில் நகை, பணம் திருடும் கும்பலைப் பிடிக்க கேரள போலீஸார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூரில் கிறிஸ்தவ தேவாலயத்தின் பாதிரியார், சில மாதங்களுக்கு முன்பு தனது அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவர் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம், டிஜிட்டல் கேமரா, லேப்டாப், செல்போன் கொள்ளை போனது. இதுபற்றி மறையூர் போலீஸில் பாதிரியார் அளித்த புகாரில், ‘எனக்கு இதய நோய் உள்ளது. சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூர் டாக்டர் ஹேமந்த், அவருடைய நண்பர் சுகதேவ் ஆகிய 2 பேரும் என் அறையில் தங்கியிருந்தனர். அவர்கள்தான் கொள்ளையடித்துள்ளனர்’ என்று தெரிவித்திருந் தார்.

மறையூர் போலீஸ் எஸ்ஐ அஜய்குமார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டார். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பாதிக்கப்பட்ட பாதிரியார் ‘பிளானட் ரோமியோ’ என்ற ஓரினச்சேர்க்கை இணையதள குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். அந்தக் குழுவில் சிங்கப்பூர் டாக்டர் ஹேமந்த் என்ற பெயரில் பதிவிடப்பட்டிருந்த நபரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.

அதன்படி, அந்த நபர் பாதிரியாரை சந்திக்க தனது நண்பருடன் சென்றுள்ளார். நீண்ட நேரம் பயணம் செய்ததால் களைப்பாக இருக்கிறது. முதலில் டிபன் சாப்பிடுவோம் என்று பாதிரியாரிடம் அந்த நபர் கூறியுள்ளார். சாப்பிடுவதற்கு முன்பு பாதிரியார் கை கழுவ சென்றிருந்த போது சப்பாத்தி குருமாவில் மயக்க மருந்தை கலந்துள்ளனர். அதை சாப்பிட்ட பாதிரியார் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரது அறையில் இருந்த பணம், பொருட்களை 2 பேரும் கொள்ளையடித்து தப்பி சென்றிருப்பது தெரியவந்தது.

முதலில் இதை மறைத்து பொய்யான புகாரை தெரிவித்த பாதிரியார், பின்னர் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ஹேமந்த் என்ற பெயரில் பாதிரியாரை தொடர்புகொண்ட நபரின் செல்போன் எண்ணை வைத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். அது சென்னை கிண்டியில் பணியாற்றும் கேரள இன்ஜினியர் ஒருவரின் பெயரில் இருந்தது. அவரிடம் விசாரித்தபோது, தனது செல்போன் மாயமாகி 3 மாதங் கள் ஆகிவிட்டது என்று தெரிவித் தார்.

அந்த செல்போன் எண்ணின் 3 மாத செயல்பாடுகள் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் கேரள போலீஸார் ஆய்வு செய்தனர். அந்த எண்ணில் இருந்து கோவையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியருக்கு அடிக்கடி அழைப்பு சென்றிருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, கேரள பாதிரி யார் பாணியில் தன்னிடமும் ஒரு வர் 2 பவுன் நகைகளை பறித் துச் சென்றதாக தெரிவித்துள் ளார்.

இதே பாணியில் திருப்பூரை சேர்ந்த இன்ஜினியர் ஒருவரிடமும் கொள்ளை நடந்திருப்பதை கேரள தனிப்படை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, நூதன முறையில் கொள்ளையடித்த நபரின் புகைப்படம் கிடைத்துள்ளது. பாதிரியார், கோவையை இளைஞரிடம் அந்தப் படத்தை காட்டியபோது, தங்களை ஏமாற்றியது அவர்தான் என அடையாளம் காட்டினார்.

இதற்கிடையே கொள்ளையில் ஈடுபட்ட நபரின் செல்போன் எண் பயன்பாடு கடந்த அக்டோபர் 1 முதல் 21-ம் தேதி வரை சென்னை அரும்பாக்கம் ஜெய் நகரை காட்டி இருந்தது. அதனடிப்படையில், கேரள தனிப்படை போலீஸார் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

இதுகுறித்து மறையூர் போலீஸ் எஸ்ஐ அஜய்குமார் கூறும்போது, ‘‘கேரளாவிலும் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், சேலம், திருப்பூர், கோவை என பல்வேறு இடங்களில் ஓரினச்சேர்க்கைக்காக ஏங்கும் ஆண்களை குறி வைத்து மோசடி நடந்துள்ளது. குற்றவாளி சென்னையில் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது.சென்னை போலீஸார் உதவியுடன் அவரை விரைவில் கைது செய்வோம். ‘பிளான்ட் ரோமியோ’ என்ற ஓரினச்சேர்க்கை இணையதள குழுவை ஆய்வு செய்தபோது அதில் தொழிலதிபர்கள், டாக்டர்கள், இன்ஜினீயர்கள் உறுப்பினர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, குற்றவாளி பிடிப்பட்டால் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகலாம்’’ என்றார்.

கேரள போலீஸ் தகவல்

கேரள தனிப்படை போலீஸார் கூறும்போது, ‘‘பிளான்ட் ரோமியோ என்ற இணையதளத்தில் உறுப்பினராக உள்ள ஒருவரை பிடித்துள்ளோம். அவரை எங்களோடு அழைத்து வந்துள்ளோம். சென்னை மெரினாவில் அதிக அளவில் இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் கூடுவதாக அவர் தெரிவித்துள்ளார். தங்களை தனியாக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக ஒரு காதில் கடுக்கன், குறுந்தாடி வைத்து உதட்டில் லேசாக சாயம் பூசியிருப்பார்கள். மொத்தத்தில் பெண்கள் தோற்றம் போல் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வார்கள்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x