Published : 01 Dec 2017 12:40 PM
Last Updated : 01 Dec 2017 12:40 PM

ஒக்கி புயல் நிலவரம்: கன்னியாகுமரியில் துரித கதியில் மீட்புப்பணிகள்; தூத்துக்குடியில் அமைச்சர், ஆட்சியர் ஆய்வு

திருநெல்வேலியில் கட்டிமுடிக்கப்பட்டு ஓர் ஆண்டேயான பாலம் வெள்ளத்தால் உடைந்தது

திருநெல்வேலியில் கட்டிமுடிக்கப்பட்டு ஓர் ஆண்டே ஆன நிலையில், பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில், கொடுமுடியாறு அணை நிரம்பியதால் அதிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர், நம்பியாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தளவாய்புரம், ஆவரந்தலை கிராமங்களை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்தப் பாலம் கட்டப்பட்டு ஒரு ஆண்டே ஆகிறது. தரம் குறைந்த முறையில், மண்கொண்டு பாலம் கட்டப்பட்டதால், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாலம் உடைந்ததால் திருக்குறுங்குடியில் இருந்து ஆவரந்தலை, கட்டளை, வன்னியன்குடியிருப்பு மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த ஊர்களுக்குச் செல்ல சுமார் 6 கி.மீ. தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு: 3 அணையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை   

கன்னியாகுமரியில் 'ஒக்கி' புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை, மீனவர்கள் உட்பட 10 ஆக அதிகரித்துள்ளது. அங்குள்ள 3 அணையோரப் பகுதிகள் வேகமாக நிரம்பி வருவதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட கடும் மழை, சூறைக் காற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. நேற்றுவரை தொடர் மழையினால் மரங்கள் முறிந்து விழுந்து நான்கு பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) பரளியாறு எஸ்டேட் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் விமல்சிங்(27) என்னும் இளைஞர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதே போல் புதுக்கடை பைங்குளத்தைச் சேர்ந்த ரத்தினசாமி(62) மரம் விழுந்து பலியானார். வடசேரி ஆராட்டு தெருவை சேர்ந்த தியாகராஜன்(57) என்பவர் அப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றபோது உயிரிழந்தார்.

3 மீனவர்கள் பலி

குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் பாபு, சின்னத்துறையைச் சேர்ந்த ஜெலஸ்டின், இரவிக்குப்பந்துறையின் வில்பிரட் ஆகிய 3 மீனவர்களும் வெள்ளிக்கிழமை அன்று கடலிலேயே உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் 'ஒக்கி' புயலால் குமரியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் இன்னும் சாரல், மழை நீடித்து வருகிறது. ஏற்கனவே நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் முக்கடல் அணை முழுக் கொள்ளளவை எட்டியது. இந்நிலையில் பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2 ஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் இந்த மூன்று அணையோரப் பகுதியை சேர்ந்த மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுசீந்திரத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் நேரில் சென்று பார்வையிட்டார்.

கடலின் ஆழத்துக்குச் சென்று தேட கேரள கடலோரக் காவல்படை தயக்கம்?- மீனவர் குடும்பங்கள் போராட்டம்

காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கத் தயக்கம் காட்டுகின்றனர் என்று கூறி, மீனவர்கள் குடும்பத்தினர் விழிஞ்சம் பகுதியில் கேரள கடலோரக் காவல்படையினருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலின் ஆழத்துக்குச் சென்று தேட அவர்களுக்கு விருப்பமில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காணாமல் போனவர்களைத் தேடிக் கேரள கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான கப்பல் கிளம்பியது.

அதிகாரபூர்வ அறிக்கையின்படி, திருவனந்தபுரத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து 71 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். ஆனால் உள்ளூர் மக்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகப் புகார் கூறுகின்றனர். இதையடுத்து காணாமல் போன மீனவர்களின் குடும்பங்கள் பூந்துரா பகுதியில் நெடுஞ்சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலத்தின் அடிமலத்துரா மற்றும் பூந்துரா ஆகிய இடங்களில் இருந்து 47 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு மீனவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் மழை தொடர்ந்து, கடுமையாகப் பொழிந்து வருகிறது.

காணாமல் போன 69 கேரள மீனவர்களை கண்டுபிடித்தது இந்திய கடற்படை; 20 பேர் மீட்பு

கேரள மாநிலத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் காணாமல் போன மீனவர்களை மாநில அரசு மற்றும் கடலோரக் காவல்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை தேடி வருகிறது. அதில்  69 கேரள மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் 20 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய கடற்படை செய்தித் தொடர்பாளர், ''பி8ஐ, டார்னியர் மற்றும் ஏஎல்ஹெச் துருவ் ஆகிய விமானங்கள் மற்றும் கடற்படைக்குச் சொந்தமான 3 கப்பல்கள் மூலம் 69 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர் மீட்கப்பட்டுவிட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது'' என்றார்.

இதுகுறித்துப் பேசிய திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் கே.வாசுகி, இதுவரை 95 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் 185 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் அங்குள்ள பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாபநாசம் அணைப் பகுதியில் சுமார் 451 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 24, 360 கன அடியாக அதிகரித்து. 143 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 129.1 அடியாக உயர்ந்துள்ளது.

156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் இப்போது 147 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல 118 அடி உயரமுள்ள மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 104 அடியாக அதிகரித்துள்ளது. இதனால் இவையனைத்தும் விரைவில் தங்களது முழுக் கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகீறது.

மாவட்டத்தின் சிறிய அணைகளான கடனா அணை, ராமநதி, கருப்பா நதி, குண்டாறு, நம்பியாறு மற்றும் கொடுமுடியாறு அணைகள் தங்களின் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

கன்னியாகுமரியில்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்வது வழக்கம்தான். ஆனால், 'ஒக்கி' புயல் காரணமாக புதன்கிழமை இரவில் இருந்தே பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதை எப்போதும் போன்ற கனமழை என்றே மக்கள் சாதாரணமாக எடுத்துகொண்டனர். ஆனால், வியாழக்கிழமை காலை 7 மணியில் இருந்து காற்றின் வேகம் அதிகரித்தது. 80 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வீசிய காற்றால் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்தது.

இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்புப்பணிகள் துரித வேகத்தில் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புக் குழுவில் 65 பேரும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் 75 பேரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிவாரண மையங்கள்

அங்கு நேற்று (வியாழக்கிழமை) 10 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. அவற்றில் குழந்தைகள், பெண்கள் உட்பட 1,044 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவும் வழங்கப்படுகின்றன. 250 குடும்பங்கள் அங்கே இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுவரை குமரியில் 985 மின் கம்பங்கள், 5 ட்ரான்ஸ்ஃபார்மர்கள் சேதமடைந்துள்ளன. அவற்றைச் சரிசெய்ய விருதுநகர், மதுரையில் இருந்து மின் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து நிறுத்தம்

சுசீந்திரம் அருகே உள்ள பழையாறு மழையால் பெருக்கெடுத்து ஓடியதால், மழை நீர் இரண்டு கிராமங்களில் புகுந்துள்ளது. இதனால் நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலை போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி நிலவரம்

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருகிறது. தாமிரபரணியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுளது. மீனவர்கள் இன்றும் கடலுக்குச் செல்லவில்லை. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன மழையால் 100-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விழுந்துள்ளன. இரண்டாவது நாளாக பெரும்பாலான பகுதிகளில் நகரின் சில இடங்கள் தவிர மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர், ஆட்சியர் ஆய்வு

இந்நிலையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகள் மற்றும் நிவாரணப் பணி மேற்கொள்ளப்படும் இடங்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மற்றும் கண்காணிப்பு அலுவலர் குமார் ஜெயந்த் ஐஏஎஸ் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே சென்னை- தூத்துக்குடி இடையேயான விமானப் போக்குவரத்து இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x