Published : 22 Aug 2023 10:49 PM
Last Updated : 22 Aug 2023 10:49 PM
சென்னை: அமைப்புசாராத கிக் (Gig) தொழிலாளர்களின் நலன் காக்கத் தனி நல வாரியம் அறிவித்தமைக்குப் பல தரப்பினரும் உளமாரப் பாராட்டி நவிலும் நன்றியால் நெகிழ்கிறேன்.
ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விகி தொழிலாளர்களுக்குத் தனி நல வாரியம் அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது. கிக் பொருளாதாரம் என்று அழைக்கப்படும் இதுபோன்ற பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு, விபத்துக் காப்புறுதி, சுகாதாரக் காப்புறுதி போன்றவை இல்லை. இந்த நிலையில் அமைப்புசாராத கிக் (Gig) தொழிலாளர்களின் நலன் காக்கத் தனி நல வாரியம் அமைக்கப்படும் என சுதந்திர தினத்தன்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விகி தொழிலாளர்கள் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர். அதேபோல் திரைப்பட தொழிலாளர்கள் சார்பில் இயக்குநர் வசந்தபாலன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்து தமிழ் திசை நாளிதழில் "கிக் தொழில் துறையினரின் எதிர்காலம் உறுதிப்பட வேண்டும்" என்ற தலைப்பில் வெளியான தலையங்க கட்டுரையை இணைத்து வெளியிட்டுள்ள பதிவில், "அமைப்புசாராத கிக் (Gig) தொழிலாளர்களின் நலன் காக்கத் தனி நல வாரியம் அமைக்கப்படும் என விடுதலை நாள் உரையில் அறிவித்தமைக்குப் பல தரப்பினரும் உளமாரப் பாராட்டி நவிலும் நன்றியால் நெகிழ்கிறேன்.
கைரிக்ஷா தொழிலாளர்கள், குடிசைவாழ் மக்கள் எனக் கோட்டையில் இருந்தாலும் எளிய மக்களின் நலனையே எண்ணித் திட்டங்கள் தீட்டிய கலைஞரின் நூற்றாண்டில் இத்தகைய அறிவிப்பை வெளியிடும் வாய்ப்பு கிட்டியது நான் பெற்ற பேறு" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT