Published : 22 Aug 2023 08:47 PM
Last Updated : 22 Aug 2023 08:47 PM
மதுரை: தமிழகத்தில் கோயில்கள் பெயரில் செயல்பட்டு வந்த 87 போலி வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மார்கண்டன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் முக்கிய கோயில்கள், மடங்களுக்கு வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு நேரில் வர முடியாதவர்கள் கோயில் பெயர்களில் செயல்படும் இணையதளம் வழியாக நன்கொடை செலுத்துகின்றனர்.
சென்னை கபாலீஸ்வரர் கோயில், பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோயில்கள் பெயரில் அதிகாரபூர்வ இணையதளங்கள் உள்ளன.
இந்நிலையில், முக்கிய கோயில் பெயர்களில் தனி நபர்கள் இணையதளங்கள் தொடங்கி தவறான தகவல்களை அளித்து நிதி வசூலித்து மோசடி செய்து வருகின்றனர். இந்த மோசடியை தடுக்க கோயில்கள் பெயர்களில் தனிநபர்கள் இணையதளம் தொடங்க தடை விதித்தும், அதுபோன்ற இணையதளங்களை முடக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கோயில் பெயர்களில் போலி முகவரியில் இணையதளங்கள் நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. கோயில் பெயர்களில் இயங்கும் இணையதளங்களை கண்டறிந்து தடை செய்வது எப்படி? ஆன்லைனில் நன்கொடை வசூலிப்பதை தடுப்பதற்கான சட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து மத்திய / மாநில அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், கோயில்களின் பெயரில் போலியாக செயல் பட்ட 87 போலி வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. திருக்கோயில் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில், 48 கோயில்கள் விபரங்கள் உள்ளன. மற்ற கோயில்களின் விபரங்கள் அனைத்தும் படிப்படியாக பதிவேற்றப்படும். அறநிலையத் துறைக்கு தனி இணையதளம் உள்ளது. அதில் அனைத்து கோயில்களின் விபரங்களும் உள்ளன. கோயில்களின் வெளியில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT