Published : 22 Aug 2023 07:05 PM
Last Updated : 22 Aug 2023 07:05 PM
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்தது குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கின் விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின், ஆர்.கே.நகர் தொகுதிக்கு 2017ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுக சார்பில் டிடிவி தினகரனும், திமுக தரப்பில் மருதுகணேசும் போட்டியிட்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான 89 கோடி ரூபாய் குறித்த கணக்குகள் அடங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்த மனுவை, சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரும் வகையில் திருத்தம் செய்ய திமுக வேட்பாளர் மருதுகணேசுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT