Published : 22 Aug 2023 06:12 PM
Last Updated : 22 Aug 2023 06:12 PM

அதிமுக மாநாட்டில் கனிமொழி எம்.பி பற்றி அவதூறு பாடல்: மதுரை சரக டிஐஜியிடம் திமுக வழக்கறிஞர் புகார் மனு

மதுரை சரக டிஐஜியிடம் இன்று  திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான க.இளமகிழன் அக்கட்சியினருடன் புகார் மனு அளித்தார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: அதிமுக மாநாட்டில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி பற்றி அவதூறு பாடல் பாடியவர் மீதும், விழா ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை சரக டிஐஜி அலுவலகத்தில் இன்று திமுக வழக்கறிஞர் புகார் மனு அளித்தார்.

இது தொடர்பாக மதுரை திருநகரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் க.இளமகிழன் அளித்த மனுவில், ''திமுகவில் 2000 முதல் உறுப்பினராக இருந்து தற்போது தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளேன். ஆக.20-ல் மதுரை வலையங்குளத்தில் நடந்த அதிமுக மாநாட்டில் கலை நிகழ்ச்சியில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாடிய ஒருவர், திமுக துணைப்பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழியின் கண்ணியம், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தரம் தாழ்ந்த முறையில் பாடல் பாடினார்.

இச்செயலை மாநாடு ஏற்பாட்டாளர்களான முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜு, வி.வி.ராஜன்செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர். இதனால் திமுக கட்சிக்கும், கனிமொழி எம்.பிக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

பொதுவெளியில் ஒரு பெண்ணை களங்கப்படுத்தும் வகையில் அவதூறான பாடல் வரிகளை பலரது முன்னிலையில் பெயர் விலாசம் தெரியாத, பார்த்தால் அடையாளம் காட்டக்கூடிய நபர் மீதும், அவரை கூட்டுச்சதி செய்து அவதூறு பரப்ப தூண்டி பொதுமேடையில் பாடவைத்தர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x