Published : 22 Aug 2023 02:42 PM
Last Updated : 22 Aug 2023 02:42 PM

மதுரை அதிமுக மாநாட்டில் மீதமான உணவுகளை அப்புறப்படுத்தும் பணி தொடக்கம்

மதுரை: அதிமுக மாநாடு நடந்த மதுரை வலையங்குளத்தில் சிதறி கிடந்த உணவுகள், பாக்கு மட்டை தட்டுகள் போன்றவற்றை மாவட்டச்செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மதுரை அருகே வலையங்குளத்தில் அதிமுக வீரவரலாறு எழுச்சி மாநாடு கடந்த 20-ம் தேதி நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்காக மாநாட்டுப் பந்தலில் பொங்கல், சாம்பார் சாதம் மற்றும் புளியோதரை போன்றவை மாநாடு தொடங்கிய காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வழங்கப்பட்டன. பொங்கலும், சாம்பார் சாதமும் சுடச்சுட வழங்கப்பட்டதால் தொண்டர்கள் அந்த உணவுகளை அதிகளவு வாங்கி சாப்பிட்டனர். மேலும், இந்த உணவுகள் தரமாக வழங்கப்பட்டதால் மீதமாகவில்லை.

ஆனால், புளியோதரை முந்தைய நாளே தயார் செய்து தொண்டர்களுக்கு வழங்கப்பட்டதோடு சரியான பதத்தில் இந்த உணவு தயாரிக்கப்படவில்லை. புளியோதரை தரமாகவும் இல்ல. அதனால், புளியோதரை உணவு மாநாட்டு உணவுக் கூடங்களில் டன் கணக்கில் மிதமானது. மாநாட்டு முடிந்த நிலையில் நேற்று மீதமான புளியோதரை உணவு அப்புறப்படுத்தப்படாமல் உணவு கூடங்களில் கீழே தரையில் கொட்டப்பட்டு கிடந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உணவுகள் தயாரிப்பு முழுவதும் வெளிமாவட்ட அதிமுகவினர் மேற்பார்வையில் நடந்தால் உள்ளூர் நிர்வாகிகள் அதில் தலையிட முடியவில்லை. உணவு தயாரிப்பில் அதிமுக நிர்வாகிகள் கோட்டைவிட்டது இதுவும் ஒரு காரணம் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநாட்டு பந்தலில் மீதமான உணவுகளையும், தொண்டர்கள் சாப்பிட்டு தூக்சி வீசிய தண்ணீர் பாட்டில்கள், பாக்கு மட்டை தட்டுகளை இன்று புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ரமேஷ், நிலையூர் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு அப்புறப்படுத்தும் பணி நடந்தது.

மாநாடு, நடந்த வலையங்குளம் புறநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்டது என்பதால் அம்மாவட்ட செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா இன்று காலையே உடனடியாக மாநாடு நடந்த இடத்திற்கு சென்று மீதமான உணவுகளையும், மற்ற குப்பைகளையும் பார்வையிட்டார்.

தொழிலாளர்களை வரவழைத்து, ஜேசிபி இயந்திரங்களையும், டிராக்டர்களையும் கொண்டு மாநாட்டு நடந்த இடங்களையும் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். விரைவில் இந்த பணி முடிந்தும், பந்தல், மேடை அப்புறப்படுத்தப்பட்டு மாநாடு நடந்த இடம், அதன் உரிமையார்களிடம் ஒப்படைக்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x