Published : 22 Aug 2023 12:30 PM
Last Updated : 22 Aug 2023 12:30 PM
சந்திரயான்-3 விண்கலம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
இந்திய விண்வெளி ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் நேற்று கூறியதாவது: ரஷ்யா நிலவுக்கு அனுப்பிய லூனா -25 விண்கலம் நொறுங்கியதை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு விண்வெளி ஆய்வில் மிகுந்த அனுபவம் கொண்ட நாடு எவ்வாறு தோல்வியை தழுவியது என்று எண்ணம் ஏற்படக்கூடும். இறங்கும் இடம் மிகவும் கரடுமுரடான பகுதி. மிகுந்த சவாலானது.
சந்திரயான் 2 திட்டத்திற்கு ஏற்பட்ட அதே நிலை தான் ரஷ்யாவுக்கு தற்போது ஏற்பட்டதுபோல் தெரிகிறது. இறங்கும் போது பல கி.மீ தூரம் ஆங்காங்கே மலை முகடுகள் போல இருக்கும். வேகத்தை குறைக்கும்போது உயரமும் குறைந்து கொண்டே இருக்கும்.
சந்திரயான்-3 திட்டத்தில் சமவெளி பகுதியில் தரையிறக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். ஆனால் இறங்க தொடங்கும் இடத்திற்கும் இறங்கும் இடத்திற்கும் இடையே உள்ள பகுதியில் மலை முகடுகள் இருந்தால் கூட பிரச்சினை ஏற்பட்டுவிடும்.
ரஷ்யாவுக்கு அந்த நிலையில்தான் பிரச்சினை ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன். பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் இந்தியாவுடன் ரஷ்யா இணைந்து திட்டத்தில் செயல்பட முடியவில்லை.
சந்திரயான்1 திட்டத்திற்கு பின் சந்திரயான் 2 திட்டத்தை முன்னெடுக்க ரஷ்யா முக்கிய காரணமாக விளங்கியது. ரஷ்யாவின் 14 ஆண்டுகால உழைப்பு நொடிப்பொழுதில் காணாமல் போனது மிகவும் வருத்தமளிக்கிறது.
நாம் எத்தகைய முயற்சி மேற்கொண்டாலும், நாம் இதுவரை பார்க்காத இடத்தில் ஒரு சவாலான காரியத்தை மேற்கொண்டுள்ளோம். ரஷ்யா தோல்வியடைந்த பகுதியை இந்தியாவின் சந்திரயான்-3 கடந்துவிட்டது. வேகத்தை குறைக்கும்போதே அவர்களுக்கு பிரச்சினையாகிவிட்டது.
நாம் இரண்டு நாட்களுக்கு முன்னரே வேகத்தை குறைத்து தொடர்ந்து வெற்றிகரமாக இயக்கி வருகிறோம். சந்திரயான் -3 திட்டத்தில் அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் சந்திரயான் 2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டருக்கும் தொடர்பு ஏற்படுத்திவிட்டோம். அனைத்தும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சந்திரயான்-3, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் மீது நம்பிக்கை கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT