Published : 22 Aug 2023 05:15 AM
Last Updated : 22 Aug 2023 05:15 AM
சென்னை: டிடிவி. தினகரன் ரூ. 28 கோடி அபராதத்தை செலுத்தவில்லை என்பதால் திவாலானவர் என்ற நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி வாதிட்டார்.
அமமுக பொதுச் செயலாளரான முன்னாள் எம்பி டிடிவி.தினகரனின் வங்கி கணக்கில் கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் அமெரிக்க டாலர் அங்கீகாரமற்ற முகவர் மூலமாக டெபாசிட் ஆனதாகவும், பின்னர் அவர் அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியுள்ளதாகவும் கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் டிடிவி.தினகரன் மீது ஃபெரா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த 1998-ம் ஆண்டு டிடிவி. தினகரனுக்கு ரூ. 31 கோடி அபராதம் விதித்து மத்திய அமலாக்கத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தினகரன், மேல் முறையீடு செய்தார். அவரது மனுவை பரிசீலித்து மேல்முறையீட்டு ஆணையம், அவருக்கு விதிக்கப்பட்ட ரூ. 31 கோடி அபராதத்தை ரூ. 28 கோடியாக குறைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில் திவால் நடவடிக்கையை எதிர்த்து தினகரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை அவரை அவமானப்படுத்தும் நோக்கிலேயே இதுபோல திவாலானவர் என அறிவிக்க கோரியிருப்பதாகவும், இது உரிமையியல் நீதிமன்றத்தால் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினை எனவும் கூறி கடந்த 2003-ல் தினகரனுக்கு சாதகமாக உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, பெரா சட்டத்தின் கீழ் டிடிவி தினகரனுக்கு விதிக்கப்பட்ட ரூ. 28 கோடி அபராதத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் அவர் இந்த தொகையை பல ஆண்டுகளாக செலுத்தாமல் காலதாமதம் செய்து வருகிறார். தொகையை செலுத்தாதபட்சத்தில் அவரை திவாலானவர் என சட்டப்படி அறிவிக்கக்கோருவதில் எந்த தடையும் இல்லை. இந்த நடவடிக்கையை அவர் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும் என வாதிட்டார்,
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து தினகரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜராகி வாதிடுகையில், ‘‘ திவாலானவர் என அறிவிக்க அது உரிமையியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். அதை்ததான் உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதைவிடுத்து அபராதத்தை செலுத்தவில்லை என்பதற்காக திவாலானவர் என அறிவிக்கும்படி கோர முடியாது என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை வரும் செப்.4-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 2 Comments )
அவங்க குடும்பமே திவால் குடும்பமே
1
0
Reply
Reduce departments which acts on whims and fancies of few and make them power less, and declare them uless
0
0
Reply