Published : 22 Aug 2023 04:50 AM
Last Updated : 22 Aug 2023 04:50 AM
சென்னை: சென்னை அருகே உள்ள பேரூரில் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் ரூ.4,276.44 கோடியில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பேரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட, கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகத்தின் துணை தூதர் தாகா மசாயுகி, இந்தியாவுக்கான ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் தலைமை அலுவலர் சைட்டோ மிட்சுனோரி, வி.எ.டெக் வபாக் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜீவ் மிட்டல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வளர்ந்து வரும் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை வடிவமைத்து, நிறுவி,இயக்கி மற்றும் திருப்பித் தரும் அடிப்படையில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம், நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதில், நெம்மேலியில் கூடுதலாக நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர்உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பெருகிவரும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு போதுமான அளவில்குடிநீர் வழங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையில், சென்னை அருகே உள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் திட்டத்துக்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய நிலையமாக இது அமைய உள்ளது. பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
22.67 லட்சம் பேர் பயனடைவார்கள்: இங்கு கடல்நீரை குடிநீராக்க 1,150 மீட்டர் நீளத்துக்கு கடலுக்குள் குழாய்பதிக்கப்படும். மற்ற வழக்கமான நிலையங்களைவிட நவீன முறையில் நீர்கரைந்த காற்று அலகுகள், இரட்டை ஈர்ப்பு மணல் வடிகட்டி அலகுகள் இங்குஅமைக்கப்பட உள்ளன. இந்த நிலையத்தில் இருந்து போரூர் வரை 59 கி.மீ.நீளத்துக்கு குடிநீர் குழாய் பதிக்கப்படும். இத்திட்டம் மூலம் சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகள், சென்னை மாநகராட்சிக்கு அருகே 20ஊராட்சி பகுதிகளில் உள்ள 22.67 லட்சம்மக்கள் பயன் பெறுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT