Published : 22 Aug 2023 05:59 AM
Last Updated : 22 Aug 2023 05:59 AM
சென்னை: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை சார்பில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், மாவட்டங்களின் பசுமைக் கனவுகளை நிறைவேற்ற உதவும் வகையிலும் ‘முதல்வரின் பசுமை புத்தாய்வுத் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை நேற்று தொடங்கிவைத்தார். இதை செயல்படுத்துவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் ஆய்வு நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 40 பசுமை ஆர்வலர்கள், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைச் செயலர் சுப்ரியா சாஹு, சுற்றுச்சூழல் மற்றும்காலநிலை மாற்றத் துறை இயக்குநர் தீபக் எஸ்.பில்கி, சிறப்புச் செயலர்கள் அனுராக் மிஸ்ரா, ரிட்டோ சிரியாக், கூடுதல் இயக்குநர் மனிஷ் மீனா, அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், அறிவாற்றல் ஆய்வு நிறுவனப் பேராசிரியர் மற்றும் தலைவர் வெங்கடராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த திட்டம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ் செயல்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனம், திட்டத்தின் அறிவுசார் பங்குதாரராக செயல்படும். திட்டத் தலைவர், 40 பசுமைஆர்வலர்கள், 4 ஆராய்ச்சி இணையாளர்கள் ஆகியோர் தகுதியின்அடிப்படையில் இந்த திட்டத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், வேலைவாய்ப்பு, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய மூன்று துறைகளின் துணைகொண்டு, தமிழகத்தை மற்ற மாநிலங்களுக்குத் தலைமை வகிக்கும் வகையில், சுற்றுச்சூழல் ரீதியாக முன்னேறிய மாநிலமாக மாற்றுவது, சுற்றுச்சூழல் சார் கொள்கைகள் வடிவமைப்பு, செயலாக்கம் மற்றும் நிர்வாகத்தில் உறுதிமிக்கஇளைஞர்களை ஈடுபடுத்தல், தமிழகம் முழுவதும் சுற்றுச்சூழல் சேவைகளை சிறப்பாக வழங்குவதில் மாவட்ட நிர்வாகங்களுக்கு உறுதுணையாக இருத்தல், சுற்றுச்சூழல் கொள்கை மேலாண்மைக்குவலுவான நிறுவன அமைப்புகளையும், செயல்முறைகளையும் உருவாக்குதல் போன்றவையாகும்.
பசுமை ஆர்வலர்கள், தமிழகத்தில் உள்ள மாவட்ட நிர்வாகங்களின் சுற்றுச்சூழல் முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக முக்கியப் பங்காற்றுவர். சிறப்பான சுற்றுச்சூழல் சேவைகளை வழங்குதல் மற்றும்“மீண்டும் மஞ்சப்பை” போன்றசூழல்சார் மாற்றுப் பொருட்களின் பயன்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற பணிகளிலும் அவர்கள் ஈடுபடுவர். இரண்டாண்டுகள் சேவைபுரியும் காலகட்டத்தில், அவர்களுக்கு மாதம் ரூ.60,000 உதவித்தொகை வழங்கப்படும்.
அதேபோல, திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி வகுப்புகள், பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படும். 2 ஆண்டு சேவையின் முடிவில் அண்ணா பல்கலைக்கழகத்திடமிருந்து “கால நிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை” என்ற முதுகலை பட்டயப் படிப்புக்கான பட்டத்தையும் பெறுவர். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூசெய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு இப்பணியை மேற்கொள்கிறது. இன்றைய இளைஞர்கள் காலநிலை மாற்றம் குறித்துஅறிந்துகொள்ள வேண்டும். அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைவர்,மாவட்ட வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பசுமை இளைஞர்கள் பணியாற்றுவார்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment