Published : 22 Aug 2023 06:55 AM
Last Updated : 22 Aug 2023 06:55 AM

நாட்டுக்கு சேவை செய்ய மாணவர்கள் சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் - நாகாலாந்து ஆளுநர் அறிவுறுத்தல்

சென்னை விஐடி பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கலந்துகொண்டு மாணவ மாணவியர் களுக்கு பட்டங்களை வழங்கினார். அருகில் விஐடி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் ஜி.விசுவநாதன், துணைத் தலைவர்கள் சேகர் விசுவநாதன், சங்கர் விசுவநாதன், நிர்வாக இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவநாதன், விஐடி சென்னையின் இணை துணை வேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராம் பாபு கோடாலி, விஐடி வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், வால்மார்ட் குளோபல் டெக் இந்திய துணைத் தலைவர் பாலு சதுர்வேதுலா ஆகியோர். படம்: எம்.முத்துகணேஷ்

மேலக்கோட்டையூர்: மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமின்றி, நாட்டுக்கு சேவை செய்ய சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.

வி.ஐ.டி சென்னையில் வருடாந்திர பட்டமளிப்பு விழா மற்றும் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு வி.ஐ.டி பல்கலைகழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், நிர்வாக இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஐடி பல்கலைக்கழக துணைவேந்தர் ராம் பாபு கோடாலி வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் கலந்து கொண்டு 2,961 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதில் 33 மாணவ - மாணவிகள் தங்கப்பதக்கங்களைபெற்றனர்.

விழாவில், நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் பேசியதாவது: பட்டமளிப்பு விழா என்றென்றும் மாணவர் வாழ்வில் மறக்க முடியாதநாளாகவும், உங்களின் வாழ்நாளில் ஒரு வரலாற்று நிகழ்வாகவும் திகழும். மாணவர்களின் சிந்தனைகள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். கவனச்சிதறல்களுக்கு மத்தியில் நல்லொழுக்கப் பாதையைப் பின்பற்ற வேண்டும். அனைத்து மாணவர்களும் கல்வி கற்பதோடு மட்டுமின்றி நம் நாட்டுக்கு சேவை செய்ய சிறந்த பங்களிப்பை அளிக்கவேண்டும். குறிப்பாக, வெளிநாட்டுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் அங்கு கல்வியை கற்று சம்பாதிக்க வேண்டும். பின்னர், நம் தேசத்துக்கு சேவை செய்ய திரும்பி வர வேண்டும்” என்றார்.

வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனர் கோ.விசுவநாதன் பேசியதாவது: கல்வி மேம்பாட்டுக்காக மத்திய, மாநில அரசுகள் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

நாடு முழுவதும் 20 லட்சம் மாணவர்கள் மருத்துவம் படிக்க விரும்புகின்றனர். ஆனால், 1 லட்சம் இடங்கள் மட்டுமே உள்ளன. தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் மருத்துவம் படிக்க விரும்புகின்றனர். ஆனால், 10 ஆயிரம் மருத்துவ இடங்கள் தான் உள்ளன. அதனால்தான்மாணவர்கள் சீனா, ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகளுக்கு படிக்க செல்கின்றனர்.

தேசிய மருத்துவ ஆணையம் ஒவ்வொரு மருத்துவ கல்லுரிக்கும் 150 முதல் 220 இடங்களுக்கு அனுமதி அளிக்கிறது. ஆனால், சீனா உட்பட பல நாடுகளில் 400 முதல் 600 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதே போல், அனுமதி அளித்தால் 1 லட்சம் என்ற மருத்துவ இடங்கள் 3 லட்சம் எண்ணிக்கையாக உயரும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து மாநிலம்தோறும் மருத்துவ படிப்பு இடங்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கல்வி மூலம் தான் இத்தகைய ஏற்ற தாழ்வுகளை தடுக்க முடியும்” என்றார்.

முன்னதாக, வி.ஐ.டி சென்னை வளாகத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. சுவாமி விவேகானந்தா மாணவர் விடுதி கட்டிடம், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கல்வி வளாகக் கட்டிடம் ஆகியவற்றை ஆளுநர் இல.கணேசன் திறந்து வைத்தார்.

வி.ஐ.டி சென்னையின் இணை துணைவேந்தர், வி.எஸ். காஞ்சனாபாஸ்கரன், விஐடி வேந்தரின் ஆலோசகர் எஸ்.பி.தியாகராஜன், வி.ஐ.டி வேலூர் இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மாலிக், வி.ஐ.டி பதிவாளர் டி.ஜெயபாரதி, கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன், வால்மார்ட் குளோபல் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர்(இந்தியா) பாலுசதுர்வேதுலா, பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x