Published : 22 Aug 2023 07:05 AM
Last Updated : 22 Aug 2023 07:05 AM

பியூசி படித்த 67 வயது முதியவரை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க உத்தரவு

சென்னை: பியூசி படித்த 67 வயது முதியவரை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிப்பது குறித்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை பெருங்குடியைச் சேர்ந்த முனுசாமி என்ற 67 வயது முதியவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘நான் பியூசி படித்துள்ளேன். தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. நான் நீட் தேர்வில் பங்கேற்று 408 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். எனவே என்னை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில்,‘‘பியூசி படிப்பில் அரசு பள்ளியில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்கள் உள்ளடக்கிய நேச்சுரல் சயின்ஸ் படிப்பை படித்துள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சியும் பெற்றுள் ளார்’’ என வாதிடப்பட்டது.

அப்போது மருத்துவ தேர்வுக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘மனுதாரர் பியூசி படித்துள்ளாரே தவிர, பிளஸ் 2 படிக்க வில்லை. இதனால் கலந்தாய்வில் அனுமதிக்கவில்லை’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், நீட்தேர்வுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில், ‘‘மருத்துவ படிப்புக்கு அதிகபட்ச வயது உச்சவரம்பு கிடையாது என்றாலும் பிளஸ் 2 படிப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியியல் படித்திருக்க வேண்டும். நீட் தேர்வுக்கான தகுதி விதிகளே, மருத்துவ படிப்புக்கும் பொருந்தும்’’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘முதல் சுற்று கலந்தாய்வு முடிந்துவிட்ட நிலையில், 2-வது சுற்று கலந்தாய்வுக்கு முன்பாக மனுதாரரின் கோரிக்கை மனுவை மருத்துவ தேர்வுக்குழு பரிசீலிக்க வேண் டும்’’, என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x