Published : 23 Dec 2017 11:12 AM
Last Updated : 23 Dec 2017 11:12 AM
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் தாமதம் ஏற்படுவதற்கு அதிமுகவே காரணம் என பாஜக மாநில செயலர் ஆர்.ஸ்ரீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. மதுரை அருகே தோப்பூரில் அமைந்தால் 16 மாவட்டங்களைச் சேர்ந்த 3 கோடி மக்கள் பயனடைவர். எனவே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் போக்குவரத்து உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மதுரையில் சரியாக அமைந்துள்ளதால், ஒட்டுமொத்த மாநில நலன் கருதி மதுரைதான் சரியான தேர்வு என்றோம். ஆனால் 4 மாதங்களுக்கு முன்பு பிரதமரை சந்தித்து முதல்வர் அளித்த கடிதத்தில், தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் எனத் தெரிவித்துவிட்டார்.
இதை மாற்ற பாஜக மிகக் கடுமையாக உழைத்தது. இதற்காக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி. ஆகியோர் ஈடுபாட்டுடன் உழைத்தனர். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவிடம் மதுரைதான் சரியான தேர்வு என்பதை ஆதாரங்களுடன் விளக்கினோம். இதையடுத்தே, துணை கமிட்டி அமைத்து மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது.
பாஜக வலியுறுத்தாவிட்டால், 4 மாதங்களுக்கு முன்பே செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் பணி தொடங்கியிருக்கும். தமிழக சுகாதாரத் துறை செயலர் அளித்த அறிக்கையில் மதுரைக்கு எய்ம்ஸ் வராமல் தடுக்கும் வகையில் தவறான புள்ளிவிவரங்கள் அளிக்கப்பட்டிருந்தன. இதுபோன்ற கடிதங்களை மீண்டும், மீண்டும் அனுப்பினர். திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த தவறுகளை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டினோம்.
தென் மாவட்டங்களில் தொழில் வளத்தை ஏற்படுத்த மாநில அரசு எந்த முயற்சியும் செய்யாதபோது, எய்ம்ஸை கொண்டுவர பாஜக முயற்சி செய்து வருகிறது.
ஒரே நேரத்தில் அறிவிப்பு வெளியான நிலையில், ஒரு மாநிலத்தில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கிவிட்டது. மற்ற மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. ஆனால் தமிழகத்தில்தான் இன்னும் இடம் தேர்வே நடக்காமல் இழுபறியாக உள்ளது. இதற்கு முழு காரணம் அதிமுகவின் செயல்பாடுதான்.
எய்ம்ஸ் அமைய தங்கள் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என அதிமுக அமைச்சர், எம்எல்ஏ.க்கள் தெரிவித்தனர். அப்படி யாராவது செய்துள்ளனரா?
விரைவில் அறிவிப்பு வரும்
அனைத்து தடைகளையும் தகர்த்து மதுரையில் எய்ம்ஸ் அமையும். இதற்கான அறிவிப்பு இன்னும் 8 நாட்களில் வெளியாகும் என முழுமையாக நம்புகிறோம். நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு உள்ளதால், அங்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின் அறிவிப்பு வெளியாகும். இனியும், இப்பிரச்சினையில் தமிழக அரசு பிடிவாதம் காட்டாமல், மக்கள் நலன் கருதி நல்ல முடிவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதர நடைமுறைகளை மின்னல் வேகத்தில் முடித்து, எய்ம்ஸை செயல்பட வைக்க வேண்டும்.
மத்திய அமைச்சரிடம் மனு
இதனிடையே, மதுரை எய்ம்ஸ் போராட்டக் குழுவினர் அதன் ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் தலைமையில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டாவை நேற்று சந்தித்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக்கோரி மனு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT