Published : 30 Nov 2017 06:08 PM
Last Updated : 30 Nov 2017 06:08 PM

கம்பராமாயணம் தந்த சேக்கிழார்- எடப்பாடியின் பேச்சும் எதிர்வினையும்

 

தஞ்சை எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஊரின் சிறப்புகளைப் பட்டியலிட்ட முதல்வர் ஈபிஎஸ், 'கம்பராமாயணம் தந்த சேக்கிழார்' என்று கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா இந்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் மாவட்டந்தோறும் பெரிய அளவில் மாநாடு நடத்தப்படுகிறது. இறுதியாக சென்னையில் பிரம்மாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று (புதன்கிழமை) தஞ்சாவூரில் இவ்விழா கோலாகலமாக நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வரின் உரை மிகவும் நேர்த்தியாக பக்கம் பக்கமாய் தயாரிக்கப்பட்டிருந்தது. தஞ்சாவூரைக் குறித்த பல்வேறு சிறப்புகளெல்லாம் அதில் இடம்பெற்றிருந்தன.

எனினும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றும்போது 'கம்பராமாயணம் தந்த சேக்கிழார்' என்று கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அரசு விழாவில் முதல்வருக்காகத் தயாரிக்கப்பட்ட உரையை அதிகாரிகள் முன்கூட்டியே சரிபார்க்கவில்லையா என்ற கேள்வியும் பொதுவெளியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து 'தி இந்து' இணையதளம் சார்பாகக் கருத்து கேட்கப்பட்டது.

'பதவியின் மீதான பொறுப்புணர்வு இன்மை'-ஆழி செந்தில்நாதன், அரசியல் செயல்பாட்டாளர்.

''பொதுவாகவே மாநில முதல்வரின் உரையை மற்றவர்கள்தான் எழுதிக்கொடுப்பார்கள். ஆனால் ஒரு முதல்வர், தான் பேசுவதை ஒருமுறையாவது சரிபார்த்திருக்க வேண்டாமா?

எனினும் கம்பராமாயணம் தந்த சேக்கிழார்' என்று எடப்பாடி பழனிசாமி வாய் தவறி சொல்லியிருந்தாலும் கூட பேசும்போதே அதை உணர்ந்து அதைத் திருத்தியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாதது, முதல்வர் பதவியின்மீது அவருக்குள்ள பொறுப்பின்மையையும் உதாசீனத்தையும் காட்டுகிறது.

முன்னாட்களில் முதல்வராக இருந்த ராஜாஜி, அண்ணா, கருணாநிதி ஆகியோர் இலக்கியவாதிகளாகவும் அறிஞர்களாகவும் இருந்தார்கள். ஜெயலலிதா பொது அறிவு உடையவராக இருந்தார்.

ஆனால் அத்தகைய முதல்வர் பொறுப்பின் மீதான குறைந்தபட்ச மரியாதைகூட இல்லாமல் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருப்பது ஒன்றை உணர்த்துகிறது.

தமிழ்நாட்டு அரசியல் அடைந்துள்ள வீழ்ச்சியின் வெளிப்பாடு இது!''

என்று அவர் தெரிவித்தார்.

தஞ்சை நூற்றாண்டு விழாவில் முதல்வரின் பேச்சு தொடர்பாக தமிழக செய்தித் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பிலும் இதே வாக்கியம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x