Published : 04 Dec 2017 09:55 AM
Last Updated : 04 Dec 2017 09:55 AM
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறை கேடுகள் நடக்காமல் தடுக்க, சொந்த செலவில் ஒவ்வொரு வார்டிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க திமுக முடிவு செய்துள்ளது. மேலும் இந்த தேர்தலில் வாக்கு சேகரிக்க 14 குழுக்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் என்.மருதுகணேஷ், சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், திமுக சார்பில் ஆர்.கே.நகரில் நேற்று முன்தினம் மாலை தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது.
ஆர்.கே.நகர் தொகுதியின் திமுக தேர்தல் பிரச்சார குழுவின் தலைமை நிர்வாகி மு.சண்முகம், இது தொடர்பாக ‘தி இந்து’விடம் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியாக ஆர்.கே.நகர் இருந்தது என்பதற்கு ஒரு அடையாளம் கூட இல்லை. சாலை வசதி, போக்குவரத்து நெரிசல், சுகாதார பிரச்சினை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட ஆர்.கே.நகரின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. இதனால் தொகுதி மக்கள் இந்த அரசின் மீது கோபத்தில் உள்ளனர். ஆனால், ஆளும்கட்சி தனது பண பலம் மூலம் வெற்றி பெறலாம் என நம்புகிறது. எனவே, முறைகேடுகளை தடுத்து, நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவதற்காக திமுக தீவிரமாக பணியாற்றும்.
தேர்தலில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு வார்டிலும் நாங்களே சொந்தமாக சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி கண்காணிக்கவுள்ளோம். ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து, இந்த ஆட்சியில் நடக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
இதற்காக, மாணவர்கள் அணி, மகளிர் அணி, தொழிலாளர்கள் அணி, கட்சி நிர்வாகிகள் என மொத்தம் 14 குழுக்களை அமைக்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு குழுவிலும் சுமார் 5 பேர் இருப்பார்கள்.
வரும் 7-ம் தேதி கூட்டணி கட்சி தலைவர்களின் பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. வரும் 14-ம் தேதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்த தேர்தலில் திமுக 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் மேயருமான மா.சுப்பிரமணியன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் நடத்த ஆளும்கட்சி தயக்கம் காட்டிய நிலையில், நீதிமன்றத்தின் நெருக்கடியால் தற்போது தேர்தல் நடக்கவுள்ளது. நியாய விலை கடைகளில் பொருட்கள் வழங்குவதில் குளறுபடி, டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதி, நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஆர்.கே.நகரில் சமீபத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு குறைகளை சுட்டிக்காட்டிய பிறகே இங்கு சில இடங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால், மக்களுக்கு திமுக மீது நம்பிக்கை உருவாகியுள்ளது. எனவே, இனி நடக்கும் தேர்தல்களில் திமுக வெற்றி பெறும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT