Published : 21 Aug 2023 05:29 PM
Last Updated : 21 Aug 2023 05:29 PM
சென்னை: “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலைதூக்கியுள்ள வெடிகுண்டு கலாசாரம், தற்போது கல்லூரி மாணவர்களுக்கிடையேயும் பரவியிருப்பது, தமிழகம் எத்தனை மோசமான நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளிட்டுள்ள பதிவில், "சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான பிரச்சினையில், நாட்டு வெடிகுண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தலைதூக்கியுள்ள வெடிகுண்டு கலாசாரம், தற்போது கல்லூரி மாணவர்களுக்கிடையேயும் பரவியிருப்பது, தமிழகம் எத்தனை மோசமான நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. கஞ்சா, வெடிகுண்டு உள்ளிட்டவை தமிழகத்தில் எளிதாகக் கிடைக்கிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு இதற்கு மேலும் சீர்கெட முடியாது.
உடனடியாக இந்தச் சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெடிகுண்டு கலாச்சாரத்தை மீண்டும் தலைதூக்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், மாணவர்களில் ஒரு பிரிவினர், திங்கள்கிழமை காலை கல்லூரி வாசலில் மர்மப் பொருளை வீசி வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரித்து வரும் வேளச்சேரி காவல்துறையினர், சம்பந்தப்பட்ட கல்லூரியைச் சேர்நத் 4 மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT