Published : 21 Aug 2023 05:17 PM
Last Updated : 21 Aug 2023 05:17 PM
மதுரை: மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த அதிமுக மாநாட்டில் கலந்துகொண்ட தொண்டர்களுக்காக தயார் செய்த உணவுகள் அண்டா, அண்டாவாக மாநாட்டு பந்தலிலே கீழே கொட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு’ என்ற பெயரிலான மாநாடு, அக்கட்சி பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்காக, மாநாட்டு பந்தலிலே மூன்று இடங்களில் பிரம்மாண்ட உணவுக் கூடங்கள் அமைத்து 10,000 தொழிலாளர்கள் உணவு சமைத்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சாம்பார் சாதம், புளியோதரை சாதம் போன்றவை தயார் செய்து வழங்கப்பட்டது. மொத்தம் 10 லட்சம் பேருக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டதாக மாநாட்டு ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா தெரிவித்து இருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை மாநாடு தொடங்கிய காலை 8 மணி முதல் மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்டிருந்த உணவுக் கூடங்களில் உணவுகள் வழங்கப்பட்டன. மூன்று வேளை மட்டுமில்லாது, காலை 8 மணி முதல் இரவு வரை உணவுகள் விநியோகம் செய்யப்பட்டன. மாநாடு முடிந்த நிலையில் நேற்று மாநாட்டு பந்தலில் அண்டா, அண்டாவாக டன் கணக்கில் தொண்டர்களுக்காக தயார் செய்த புளியோதரை உணவுகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. உணவுகளை இப்படி பொறுப்பு இல்லாமல் மாநாட்டு சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கொட்டிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
‘மாநாட்டுப் பொறுப்பாளர்களும் மீதமான இந்த உணவுகளை உடனடியாக ஆதரவற்ற இல்லங்கள், எத்தனையோ சாப்பாடு இல்லாமல் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்திருக்கலாம். நிர்வாகிகளும் மாநாடு முடிந்த களைப்பில் மாநாட்டு பந்தல் பக்கம் வரவில்லை’ என்ற ஆதங்கம் எழுந்துள்ளது.
இதுகுறித்து நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ''அதிமுக மாநாட்டில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள், காலையில் நடந்த மாநாட்டு கொடியேற்று விழாவுக்கு வர வேண்டும் என்றும், மாலையில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் முடிவெடுத்து மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டன. அவர்களும் அப்படியே நேற்று முன்தினம் மாநாட்டுக்கு வந்தனர்.
மாநாட்டில் அவர்களுக்காக உணவு தயார் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், வெளியூர்களில் இருந்து வந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர், வரும் வழியிலேயே காலையில் சாப்பிட்டுவிட்டு வந்தனர். பலர் மாநாடு நடக்கும் அருகே உள்ள தோட்டங்களில் சமையல் செய்து சாப்பிட்டனர். இந்த வெளியூர் நிர்வா்கிகள், தொண்டர்கள் திட்டமிட்டப்படி மதியத்துக்கு மேல் புறப்பட்டு சென்றனர். தென் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மதியத்துக்கு மேல் வந்தனர். இவர்கள் சாப்பிட்டுவிட்டு மாநாட்டுப் பந்தலுக்கு வந்தனர். அதனாலே, மாநாட்டுப் பந்தலில் தேவைக்கு அதிகமாக தயாரிக்கப்பட்ட உணவு மீதமானது'' என்றனர்.
சமையல் செய்த மாஸ்டர்களிடம் கேட்டபோது, ''சாம்பார் சாதம் மாநாட்டுப் பந்தலில் சுடச் சுட வழங்கப்பட்டது. அதனால், மாநாட்டுக்கு வந்தவர்கள் சாம்பார் சாதம் வாங்கி சாப்பிட்டனர். புளியோதரை சாப்பாடு முந்தைய நாளே தயார் செய்ததால் சூடாக இல்லை. அதனால், புளியோதரை சாப்பாடு மீதமானது. மீதமான இந்த உணவுகளை லாரிகளைக் கொண்டு வந்து ஏற்றி அப்புறப்படுத்தி வருகிறோம். இப்பணியில் 150 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளோம்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT