Published : 21 Aug 2023 01:13 PM
Last Updated : 21 Aug 2023 01:13 PM

"முதல்வர் ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ஹிட்லரின் இரண்டு சகோதரர்கள்" - டிடிவி தினகரன் விமர்சனம்

டிடிவி தினகரன் | கோப்புப்படம்

தஞ்சாவூர்: தமிழக முதல்வர் ஸ்டாலினும், பழனிசாமியும் எந்த வேற்றுமை இல்லாமல், ஹிட்லரின் 2 சகோதரர்கள் போல் உள்ளனர் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார்.

தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது: "மதுரையில் எடப்பாடி பழனிசாமி நடத்தியது எழுச்சி மாநாடு இல்லை. அவரது கம்பெனிக்கு வீழ்ச்சி மாநாடாகும். அவரிடமுள்ள முன்னாள் அமைச்சர்கள் 20 ஆயிரம் பேரை அழைத்து வருவார்கள் என்று கூறினார்கள். அவர்கூட உள்ளவர்களே என்னிடம் வருத்தப்பட்டு, இவ்வளவு வாகனம் மற்றும் பணம் செலவு செய்தும், 5,6 பேர் தான் அந்த வாகனத்தில் வந்தார்கள்.

அந்த மாநாட்டில் அதிகபட்சமாக சுமார் 2லிருந்து 2.50 லட்சம் பேர் தான் வந்துள்ளார்கள். அவர்கள் ஒரு சைபரை சேர்த்துச் சொல்லியுள்ளார்கள். எடப்பாடி பழனிசாமிக்குப் புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கியுள்ளார்கள். இதனால் புரட்சி என்ற வார்த்தைக்கே மரியாதை இல்லாமல் போய் விட்டது. அவருக்கு துரோகத் தமிழர் என்று அவருக்குப் பட்டம் கொடுக்கலாம்.காலில் விழுந்து பதவியைப் பெற்றுக்கொண்டும், தனது ஆட்சியை நீட்டிக்கக் காரணமாக இருந்த ஓ.பி.பன்னீர்செல்வம் போன்றவர்களுக்குத் துரோகம் செய்து. அவர் தான் செய்த துரோக்தினாலேயும், தவறாக ஈட்டிய பணப் பலத்தாலே, கட்சியை கபளீகரம் செய்த சாதனையால் தான் புரட்சி செய்தார் என்றால், அது வெட்கக்கேடான விஷயமாகும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதெல்லாம் காமெடியாக உள்ளது. தேர்தலுக்கு முன்பும், கரோனா காலக்கட்டத்தில் கூட நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டார். இன்று அவர் ஹிட்லர் போல, அவர் கொடுத்த வாக்குறுதிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்.தமிழக மக்கள் அவருக்கு ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்ததே தவறு என்ற எண்ணம் ஏற்படும் வகையில், தமிழக முதல்வர் கொடூரமாகச் செயல்படுகிறார்.இதே போல் தமிழக முதல்வர் ஸ்டாலினும், பழனிசாமியும் எந்த வேற்றுமை இல்லாமல், ஹிட்லரின் 2 சகோதரர்கள் போல் உள்ளனர். இவர்களுக்கு மாற்றுக் கட்சியாக அமமுகவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

அதே நேரத்தில் தமிழக முதல்வர் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் எனக் கூறியதை, அவர் எப்படி நீக்குகிறார் என நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பாஜகவில் நண்பர்கள் மட்டும் தான் உள்ளார்கள், என்றுமே அவர்களுடன் உறவு கிடையாது. வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது யாருடன் கூட்டணி என சரியான நேரத்தில் முடிவெடுப்போம். கூட்டணி இல்லாவிட்டாலும் தனித்து போட்டியிடுவோம்.

அந்த தேர்தலுக்கான கூட்டணி அமையும் பட்சத்தில் தேசிய கட்சி தலைமையில் தேர்தலைச் சந்திப்போம்.எங்களைப் பொறுத்தவரைத் தீய சக்தி திமுக எந்த விதத்திலும் வெற்றிபெறக் கூடாது. அதற்கான கூட்டணியில் நாங்கள் இணைவதற்கு தயாராக உள்ளோம்.காவிரி பிரச்சனையில் தீர்வு காணும் வகையில் தமிழக முதல்வர் வேகமாகச் செயல்பட்டு, மத்திய அரசுடன் சேர்ந்து, இதற்கு நீதிமன்றம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.ஓ.பன்னீர்செல்வமும், நானும் அண்மையில் இணைந்து போராட்டத்தில் பங்கேற்றோம். வருங்காலத்தில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x