Published : 21 Aug 2023 08:31 AM
Last Updated : 21 Aug 2023 08:31 AM
சென்னை: வேளச்சேரி, பேசின்பாலம், அம்பத்தூர் உட்பட முக்கிய ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிடத்துக்கான ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்படாததால், பயணிகள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். சும்மா கிடக்கும் பார்க்கிங் ஏரியாவில் வாகனத்தை நிறுத்த போலீஸார் அனுமதி மறுத்து அபராதம் விதிக்கின்றனர்.
சென்னை, புறநகர் பகுதிகளில் வசிக்கும் ஏழை, நடுத்தர மக்களின் தினசரி பயணத்தில் மின்சார ரயில்கள் முக்கியபங்கு வகிக்கின்றன. ரயில் நிலையங்களில் இருந்து தொலைவில் இருப்பவர்கள் இருசக்கர வாகனங்களில் வந்து ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்துகின்றனர். வீடு அருகில் இருக்கும் பயணிகள் தொலைவில் உள்ள அலுவலகத்துக்கு சென்றுவர ரயில்நிலைய பார்க்கிங்கை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு பயணிகளுக்கு வாகன நிறுத்துமிட வசதி என்பது இன்றியமையாதாக இருக்கிறது. இந்த வாகன நிறுத்துமிடங்களில் மேற்கூரை,சிசிடிவி கேமரா இல்லாதது உள்ளிட்ட சில குறைபாடுகள் இருந்தாலும் குறைந்தபட்சம் வாகன பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு. ஆனால் தற்போது அதுவும் பல இடங்களில் கேள்விக்குறியாகி உள்ளது.
ரயில் நிலையங்களில் இந்த வாகன நிறுத்தமிட வசதியை 2 ஆண்டு அல்லது 3 ஆண்டுகள் ஒப்பந்தம் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி தகுதியான அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடத்துக்கும் பொருந்தும். சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், கடற்கரை, வேளச்சேரி, திருவள்ளூர், அரக்கோணம், குமிடிப்பூண்டி உட்பட பெரும்பாலான ரயில் நிலையங்களில் ரயில்வே ஒப்பந்த பார்க்கிங் மற்றும் தனியார் நிறுவன பார்க்கிங் வசதி இருக்கின்றன. இங்கு இருசக்கர வாகனம் நிறுத்த மாதாந்திரம், 12 மணி நேரம், 24 மணி நேரம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், பேசின்பாலம், வேளச்சேரி, அம்பத்தூர் உட்பட 15-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் பார்க்கிங் எடுத்தவர்களின் ஒப்பந்த காலம் முடிந்து விட்டது. இங்கு புதிய ஒப்பந்ததாரர்கள் இன்னும் அமர்த்தப்பட வில்லை. இதனால், பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி செல்வதில் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.
வேளச்சேரி ரயில் நிலையம்: வேளச்சேரி ரயில் நிலையத்தின் வடக்கு, தென் பகுதியில் தலா ஒரு பெரிய நிறுத்தமிடமும், தலா ஒரு சிறிய நிறுத்தமிடமும் உள்ளது. பெரிய பார்க்கிங்கில் 800 முதல் 900 வண்டிகளும், சிறிய பார்க்கிங்கில் 400 வண்டிகளும் நிறுத்தமுடியும். இதற்கிடையில், தென்பகுதியில் உள்ள பெரிய பார்க்கிங் பகுதியின் ஒப்பந்தகாலம் முடிந்துவிட்டது என்று கூறி அண்மையில் திடீரென மூடப்பட்டது.
இதுதவிர, சிறிய வாகன நிறுத்துமிடமும் மூடப்பட்டது. இதனால், இங்கு பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். வடக்கு பகுதியில் உள்ள பார்க்கிங்கில் போதிய இடம் இல்லாமல் பயணிகள் தவிக்கின்றனர். பார்க்கிங் வசதி இல்லாததால் ரயில் நிலையத்தின் ஏதோ ஒரு பகுதியில் நிறுத்தி விட்டு சென்றால் ஆர்.பி.எஃப் போலீஸாரின் பறிமுதல் மற்றும் அபராதத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் பயணிகளுக்கு மிகுந்த மனஉளச்சலை ஏற்படுகிறது.
இதுகுறித்து வேளச்சேரியை சேர்ந்த இளவசரன் கூறியதாவது: வேளச்சேரி ரயில் நிலையத்தில் பைக்கை எங்கே நிறுத்துவது என்று தெரியாமல் குழப்பம் அடைகிறோம். பராமரிக்கப்படாமல் உள்ள பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தினால், திருடு போக வாய்ப்பு உள்ளது. பார்க்கிங் பராமரிப்பு ஒப்பந்த காலம் முடியும் முன்பாகவே, மாற்று ஏற்பாடு செய்து இருக்க வேண்டும். இதனால், பயணிகளுக்கு சிரமம் தவிர்க்கப்பட்டு இருக்கும். எனவே, ஒப்பந்த நிறுவனத்தை விரைவாக தேர்வு செய்து, இங்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேசின்பாலம் ரயில் நிலையம்: பேசின்பாலம் பார்க்கிங் ஏரியாவில் பராமரிப்பு ஒப்பந்தம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு முடிந்தது. இதையடுத்து, புதிய ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படாததால், இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
இதுகுறித்து பொன்னேரி பயணி காந்தி கூறியதாவது: பேசின்பாலம் ரயில் நிலைய கட்டண பார்க்கிங்கில் இருந்து வாகனத்தை எடுத்துக் கொண்டு அண்ணாநகருக்கு வேலைக்கு சென்று வருவேன். தற்போது பார்க்கிங் ஒப்பந்தாரர் இல்லாததால் இங்கு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மாயமாகி வருகின்றன. தவறி நிறுத்திவிட்டால், ஆர்பிஎப் போலீஸாரின் அபராதத்துக்கு ஆளாக நேரிடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல, அம்பத்தூர், தாம்பரம், திருமுல்லை வாயில், தரமணி, புத்தூர் உட்பட 10-க்கும் மேற்பட்ட நிலையங்களில் பார்க்கிங் பராமரிப்பு ஒப்பந்தம் வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையங்களில் வாகனங்களை நிறுத்த வசதி இல்லாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து தனியார் வாகன ஒப்பந்ததாரர்கள் கூறும்போது, "வாகன நிறுத்தத்துக்காக, ரயில்வே நிர்ணயிக்கும் தொகை அதிகமாக இருக்கிறது. சில கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதலாக செலவிட வேண்டி
யுள்ளது. இதனால், எங்களுக்கு லாபம் கிடைப்பதில்லை. எனவே, ஒப்பந்ததாரர் தேர்வு விதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும்" என்றனர்.
21 நிலையங்கள் - இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: பயணிகள் வருகை அதிகம் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில்தான் வாகன நிறுத்துமிட வசதி தேவைப்படுகிறது. ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. ஓரிரு மாதத்தில் இது நடைமுறைக்கு வரும்.
ரயில் நிலையங்களுக்கு ஏற்ப விதிமுறைகளை மாற்ற உள்ளோம். தாம்பரம், வேளச்சேரி, திருமுல்லைவாயில், புத்தூர், கொரட்டூர், தரமணி, பேசின்பாலம், இந்துகல்லூரி, அம்பத்தூர் உட்பட 21 நிலையங்களில் பார்க்கிங் பராமரிப்புக்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT