Published : 21 Aug 2023 05:53 AM
Last Updated : 21 Aug 2023 05:53 AM

அதிமுக எழுச்சி மாநாட்டால் ஸ்தம்பித்தது மதுரை; சித்திரை விழாபோல் குவிந்த தொண்டர்கள்: ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி வரவேற்பு

மதுரை: மதுரை அதிமுக மாநாட்டைக் காண சித்திரைத் திருவிழா போல் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்ததால் மதுரை ஸ்தம்பித்தது.

அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றபோது, கட்சியை எம்ஜிஆர் தொடங்கி 50 ஆண்டு நிறைவுபெறுவதைத் தொடர்ந்து மதுரையில் பொன்விழா மாநாட்டை நடத்துவதாக அறிவித்தார். அதன்படி நேற்று அதிமுகவின் பொன்விழா மாநாடு மதுரை அருகே வலையங்குளத்தில் கோலாகலமாக தொடங்கி நடந்தது.

நேற்று முன்தினத்திலிருந்தே தமிழகம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மதுரையில் திரண்டனர். பொதுச் செயலாளர் பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து காரில் மதுரை வந்தார். கப்பலூரில் நிர்வாகிகள், தொண்டர்கள் வழங்கிய வரவேற்பை ஏற்றுக் கொண்ட அவர், மாநாடு நடந்த ‘ரிங்’ ரோட்டில் இருந்து தனியார் ஹோட்டலில் இரவு தங்கினார்.

நேற்று காலை 8.45 மணியளவில் மாநாட்டுத் திடலுக்கு திறந்தவெளி வேனில் பழனிசாமி வந்தார். வேனில் நின்றபடி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது செண்டை மேளம், பேண்டு வாத்தியம், தாரை தப்பட்டை முழங்க கிராமிய கலைநிகழ்ச்சிகள், பொய் கால் குதிரை ஆட்டம், கரகாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகளுடன் சீருடை அணிந்த மகளிரணியினரின் பூரண கும்ப மரியாதை என அதிமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

அதன்பின், மாநாட்டுத் திடல் முன் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அப்போது குவிந்திருந்த தொண்டர்கள் வாழ்த்தி முழக்கமிட்டனர். வானில் 3 முறை வட்டமிட்ட ஹெலிகாப்டர் மூலம் 1 டன் ரோஜா மலர்கள் அவர் மீதும், தொண்டர்கள் மீது தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. கறுப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களில் பலூன்களை நிர்வாகிகள் பறக்கவிட்டனர். மாநாட்டு நினைவாக பழனிசாமி சமாதான புறாக்களை பறக்கவிட்டார். குதிரைகள் புடைசூழ மாநில ஜெ. பேரவை தொண்டர்கள் 3 ஆயிரம் பேர் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.

மாநாட்டு ஏற்பாடுகளை முன்னின்று செய்த மாநில ஜெ., பேரவை செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் போன்றோர் வெள்ளி செங்கோல், வாள் போன்ற நினைவு பரிசுகளை வழங்கினர்.

அதன்பின் மாநாட்டுப் பந்தலை, ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததோடு நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த அதிமுகவின் 51 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை குத்துவிளக்கேற்றி பழனிசாமி பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிசாமி ஆகியோரின் அரசியல் வரலாறு, அதிமுக ஆட்சியின் சாதனைகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன.

மாநாட்டு நுழைவாயிலின் இரு புறமும் இரு பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. மாநாட்டு திடல் முன் குவிந்திருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள், அந்த திரைகளில் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். மேடையில் அமைத்திருந்த பிரம்மாண்ட டிஜிட்டல் திரையிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தொண்டர்களுக்கு 3 வேளையும் உணவுகள் தயார் செய்து வழங்கப்பட்டன.

கலை நிகழ்ச்சிகள்: மதுரையில் மாநாடு நடந்த வட்டச் சாலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் வாகனங்களுடன் குவிந்ததால் மதுரை போக்குவரத்தே நேற்று முழுவதும் ஸ்தம்பித்தது. பொதுப் போக்குவரத்துப் பயணிகளும், சரக்கு வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். மாநாட்டில் காலை முதல் மாலை வரை தொண்டர்களை மகிழ்விக்க கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை கொடியேற்று விழா நடந்த பிறகு, மாலை பழனிசாமி மேடைக்கு வரும் வரை பந்தலில் அமர்ந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்களை மகிழ்விக்க இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசைக் கச்சேரி, மதுரை முத்து, ரோபோ சங்கர், ராஜலெட்சுமி-செந்தில், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் நடுவராக இருந்த சிறப்பு பட்டிமன்றம் போன்றவை நடந்தன. இதில், நடிகை விந்தியா, புதுக்கோட்டை செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், செய்தித் தொடர்பாளர் கல்யாண சுந்தரம் ஆகியோர் பேசினர்.

பழனிசாமிக்கு `புரட்சித் தமிழர்' பட்டம்: மதுரை அதிமுக மாநாட்டில் பழனிசாமிக்கு `புரட்சித் தமிழர்' என்ற பட்டம் வழங்கி அதற்கான சான்றிதழ் அவரிடம் வழங்கப்பட்டது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பேசியதாவது: `புரட்சித் தமிழர்' என்ற பட்டத்தை பழனிசாமிக்கு அவரது சேவையைப் பாராட்டி மக்கள் அளித்துள்ளனர். சர்வசமய பெரியோர்கள் இந்தப் பட்டத்தை வழங்கி உள்ளனர். புரட்சித் தலைவர் பட்டம் எம்ஜிஆருக்கு கிடைத்ததைப்போல், புரட்சித் தலைவி பட்டம் ஜெயலலிதாவுக்குக் கிடைத்ததுபோல், `புரட்சித் தமிழர்' பட்டம் பழனிசாமிக்கு கிடைத்துள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x