Published : 26 Dec 2017 10:41 AM
Last Updated : 26 Dec 2017 10:41 AM

பொதுமக்களை கவரவும் வருவாயை பெருக்கவும் திட்டம்: மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷாப்பில் மால்கள் - விரைவில் பணிகளை தொடங்க முடிவு

பொதுமக்களை கவரவும், வருவாயை பெருக்கவும் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

சென்னையில் தற்போது விமான நிலையம் - நேரு பூங்கா, பரங்கிமலை - நேரு பூங்கா, சின்னமலை - ஆலந்தூர் - விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக அலுவலக நாட்களில் காலை 6 மணிக்கும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் காலை 8 மணிக்கும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும். இரவு 10 மணி வரை 20 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சாதாரண நாட்களில் தினமும் சுமார் 30 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். பண்டிகை, விடுமுறை நாட்களில் 20 சதவீத பயணிகள் கூட்டம் அதிகரிக்கும். பயணிகளை கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ‘தி இந்து’விடம் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

மெட்ரோ ரயில் பயணம் குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். தற்போது மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு தினமும் செலவிடும் தொகையில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே கட்டண வசூல் மூலம் கிடைக்கிறது. ஒட்டுமொத்த செலவில் மின்சாரத்துக்கே 50 சதவீதம் ஆகி விடுகிறது.

அதே நேரத்தில் வருவாயை மட்டுமே நோக்கமாக கொண்டு மெட்ரோ ரயில் நிறுவனம் செயல்படவில்லை. பொதுமக்கள் அதிக அளவில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ஓவியம், விற்பனை கண்காட்சிகள், நாட்டுப்புற கலை, இசை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இதனால், மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் அதிகமாக கூடுவதுடன், நிர்வாகத்துக்கும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. அடுத்தகட்டமாக, ஆன்லைனில் புக்கிங் செய்யும் பொருட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெறும் வசதியை தொடங்க உள்ளோம்.

பரங்கிமலை, எழும்பூர், சென்ட்ரல் போன்ற முக்கியமான மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்கள் அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க உள்ளோம். ஈக்காட்டுதாங்கல், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களையொட்டி புதிய கட்டிடங்களைக் கட்டி வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளோம். இந்தக் கட்டிடங்களில் அலுவலகங்கள், ஷாப்பிங் மால்களை அமைக்கலாம். மெட்ரோ ரயில் நிலையத்துடன் இணைந்ததாக இந்த கட்டிடங்கள் இருக்கும். இதில் முதல்கட்டமாக ஈக்காட்டுதாங்கலில் கட்டிடம் கட்ட சிஎம்டிஏ அனுமதி அளித்துள்ளது.

இடவசதி உள்ள மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஷாப்பிங் மால்களை அமைப்பதற்கான அனுமதி பெற முயற்சித்து வருகிறோம். எழும்பூர், சென்ட்ரல், விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கும்போது, பயணிகள் எண்ணிக்கை 2 லட்சமாக உயரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x