Published : 19 Dec 2017 12:53 PM
Last Updated : 19 Dec 2017 12:53 PM

ஸ்பேஸ் கிட்ஸ் நடத்தும் இளம் இந்திய விஞ்ஞானி போட்டி: வென்றால் மாஸ்கோ செல்லலாம்- அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனி வாய்ப்பு

'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு நடத்தும் தேசிய அளவிலான அறிவியல் போட்டிக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் வெற்றி பெறும் மாணவர்கள் மாஸ்கோ அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் சிறப்பாக இந்த முறை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனியாகப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் 9 முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக தேசிய அளவிலான அறிவியல் போட்டியை நடத்தி ‘இந்திய இளம் விஞ்ஞானி’ என்னும் விருது வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தாண்டும் போட்டிகளை நடத்துகிறது.

இது குறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதி கேசன் நம்மிடம் கூறியதாவது:

அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் கலாச்சாரம் குறித்து சர்வதேச அளவிலான புரிதலை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் அமைப்பு 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'.

இந்திய மாணவ, மாணவிகளின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்திவருகிறோம். குறிப்பாக விண்வெளி அறிவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் ரோபோட்டிக்ஸ் பிரிவுகளின் கீழ் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு, 'இந்திய இளம் விஞ்ஞானி' விருதை வழங்கி வருகிறோம்.

மாணவர்களை தேர்ந்தெடுக்கும் முறை

இந்தாண்டு போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் இணையதளம் வாயிலாக டிசம்பர் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதில் வெற்றி பெறுவோர் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் உள்ள காக்ரின் காஸ்மோநெட் மையத்துக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் பிரபல கல்வி நிறுவனங்களைச் சார்ந்த பேராசிரியர்களுடன் கலந்துரையாடுவர். அதிலிருந்து முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் அறிவியல் பேச்சுப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். (இதில் ஒரு பொதுத் தலைப்பு கொடுக்கப்படும். அதில் இந்த மாணவர்கள் தலா 2 நிமிடங்கள் பேச வேண்டும்.)அதுவே இறுதி வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் போட்டியாகும்.

இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்தி, புதிய முயற்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் மாணவர்கள் முன்னெடுக்க முயற்சித்து வருகிறோம்.

விருதுகள் பெற்ற வெற்றியாளர்கள்

2016-ம் ஆண்டுக்கான 'இளம் இந்திய விஞ்ஞானி' சிவசூர்யா, குடியரசுத் தலைவரின் கையால் விருது பெற்றார். 2015-ம் ஆண்டு வெற்றியாளரான ராகுல், பிரதமரின் கையால் விருது பெற்றார். இவர்களை 'ஸ்பேஸ் கிட்ஸ்' அமைப்பே இலவசமாக மாஸ்கோ அழைத்துச் சென்றது.

2016-ல் இரண்டாம் பரிசு பெற்ற அரசுப்பள்ளி மாணவர் ஜெயக்குமார், ரஷ்யா வாழ் தொழிலதிபரின் உதவியால் வெற்றிகரமாக ரஷ்யா சென்று திரும்பினார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தனிப் போட்டிகள்

ஜெயக்குமார் ரஷ்யா சென்று வந்ததன் தொடர்ச்சியாக இந்தாண்டு முதல் அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கெனத் தனியாகப் போட்டிகளை நடத்த முடிவு செய்திருக்கிறோம். வெற்றி பெறும் மாணவர் மாஸ்கோ சென்று திரும்ப ஆகும் செலவை ஹெக்ஸாவேர் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

லிம்கா சாதனை

'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பின் மாணவ விஞ்ஞானி ரிஃபாத் ஷரூக், முதல் முறையாக என்.எஸ்.எல்.வி கலாம்.1 என்கிற பலூன் விண்கலத்தை உருவாக்கியவர். இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.மேலும், 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'வின் மாணவர்கள் குழுவுக்கு நாசாவின் ராக்கெட்டில், நானோஸாட்டிலைட்டில் இடம் கிடைத்தது. இந்தியாவில் இந்த வாய்ப்பைப் பெற்ற ஒரே குழு இதுதான்.

இவ்வாறு இந்தியா முழுவதும் சிறந்த இளம் விஞ்ஞானிகளை அடையாளப்படுத்தி அவர்களை ஊக்குவிப்பதோடு, அவர்களது சிந்தனைகளை உலகத்தோட பகிர உரிய தளமும் அமைத்துக் கொடுப்பதில் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா 'முக்கியப் பங்கு வகிக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் தகவல்களுக்கு தொடர்பு எண்: 7092212899, 8838004242.

அரசுப் பள்ளிகள் தொடர்பு கொள்ள: 9655816364.

இளம் இந்திய விஞ்ஞானி போட்டிக்கு விண்ணப்பிக்க: https://connectspacekidz.com/youngscientistindia

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x