Published : 26 Dec 2017 12:18 PM
Last Updated : 26 Dec 2017 12:18 PM
சென்னை ஆர்கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி. தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தென்மாவட்ட அதிமுகவினர் அணிமாறும் மனநிலையில் இருப்பதாக டி.டி.வி. தினகரன் தரப்பினர் தெரிவித்தனர்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய டி.டி.வி.தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவருக்கு முதல்வர் கே.பழனிசாமி அணியில் உள்ள சில எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் போனில் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தென்மாவட்டத்தை சேர்ந்த இபிஎஸ், ஓபிஸ் ஆதரவாளர்கள் சிலர் அணி மாறும் மன நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுரையில் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்ட எம்ஜிஆர் நினைவு தினத்தில் பங்கேற்ற அதிமுகவினர் சிலர், “ஆர்.கே.நகரில் திமுகவை ஜெயிக்கவிடாமல் அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் தானே வெற்றி பெற்றுள்ளார். அவர் நமது இயக்கத்தைச் சேர்ந்தவர் தானே’’ என தங்களுக்குள் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது. அந்த இடத்தில் திரண்டிருந்த தினகரன் தரப்பினர் வெற்றி கோஷம் எழுப்பியபோது, அதிமுகவினர் ‘அம்மா’ வையும் சொல்லி கோஷமிடுங்கள் என தினகரன் தரப்பினருக்கு அறிவுறுத்தியதை காண முடிந்தது.
இது குறித்து டி.டி.வி.தினகரன் அணியைச் சேர்ந்த வட்டச் செயலாளர் வழக்கறிஞர் அசோகன் உள்ளிட்டோர் கூறியது:
இபிஎஸ் - ஓபிஸ் அணிகள் இணைப்புக்குப் பிறகு டி.டி.வி. தினகரனின் செயல்பாடுகளில் வேகம் அதிகரித்தது.
தென்மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுக நிர்வாகிகள் முதல்வர் அணி பக்கமே உள்ளனர். இதனால் தென்மாவட்டங்களில் தினகரன் அதிகமாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தாலும், இருதரப்புக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. சம்பிரதாயத்துக்காக சில கட்சிக் கூட்டங்களில் இரு அணியினரும் பங்கேற்றாலும், அவர்களிடையே உள்ளக் குமுறல் தொடர்கிறது.
எங்கே இருப்பது என்ற தீர்க்கமான முடிவை எடுக்க முடியாமல் தென்மாவட்ட அதிமுகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவை எதிர்பார்த்தனர்.
இதில் டி.டி.வி.தினகரன் வெற்றியால் கட்சியின் எதிர்காலம் இனிமேல் அவர் பக்கமே இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று அவர்கள் நம்புகின்றனர். டி.டி.வி. பக்கம் வருவதற்கு அவர்கள் தயாராகிவிட்டனர். தினகரன் அணியில் உள்ள சில மூத்த நிர்வாகிகளிடம் போனில் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
தென்மாவட்டத்தில் முதல்வர் அணியில் உள்ள இரு அமைச்சர்களிடையே ஏற்பட்ட மோதல் ஆர்.கே.நகர் பிரச்சாரத்திலும் எதிரொலித்தது.
இதில் ஒரு அமைச்சர் டி.டி.வி.க்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். மதுரை மாவட்டத்தில் உள்ள ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்களும் அணி மாறும் யோசனையில் உள்ளதாகத் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT