Last Updated : 13 Dec, 2017 09:15 AM

 

Published : 13 Dec 2017 09:15 AM
Last Updated : 13 Dec 2017 09:15 AM

குட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா விரும்பினார்: முன்னாள் தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் தகவல்

‘குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் மீது முறையான நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா விரும்பினார். ஆனால் அதற்குள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவரால் தொடர் நடவடிக்கை எடுக்க முடியவில்லை’ என்று முன்னாள் தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் தெரிவித்தார்.

இது தொடர்பாக ‘இ இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி வருமாறு:

வருமான வரித் துறை விசாரணைப் பிரிவு முதன்மை இயக்குநர் என்னை சந்தித்து 2 அறிக்கைகளை கொடுத்தார். ஒன்று, குட்கா தொடர்பானது. மற்றொன்று வருமான வரித் துறை சோதனையின்போது காவல்துறை பாதுகாப்பு அளிப்பது தொடர்பானது. அறிக்கைப் பெற்றதும் உள்துறைச் செயலரை தொடர்புகொண்டு சோதனைகளின்போது போதிய பாதுகாப்பை அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன். இது எல்லாமே பதிவாகி இருக்கிறது. எதையும் அழிக்க முடியாது. பிறகு எந்த பொறுப்பும் இல்லாமல் நான் மாற்றப்பட்டேன். 2 நாட்கள் தலைமைச் செயலாளரே இல்லை. நான் அப்பதவியை விட்டு விலகிய பிறகு எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.

குட்கா ஊழல் வழக்கை விசாரிக்கும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்குநரகத்தின் வினாப் பட்டியல் கவலை தருகிறது. இது தொடர்பான தகவல்கள் என்னிடம் இருப்பதைப் போலவே கேள்விகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலாளர் என்ற வகையில் என் கடமையை நிறைவேற்றினேன். அப்போதைய முதல்வருக்கு குறிப்பும் அனுப்பினேன். அதன் மீது நடவடிக்கை எடுக்க அவர் விரும்பினார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் உடல்நலிவுற்றார்.

அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் மாநில நிர்வாகம் அலைக்கழிப்புக்கு உள்ளானது. அந்த ஆவணங்களும், பதிவேடுகளும் என்ன ஆனது என்று எனக்குத் தெரியாது. இந்த விஷயத்தில் எந்தவித ஆதாயமும் இல்லாத, ஓராண்டுக்கும்மேல் பொறுப்பிலும் இல்லாத ஒருவர்தான் நிரூபிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது தேவையற்றது. இப்போது பதவியில் உள்ளவர்களே இதற்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள்.

என் மீதோ, என் மகன் மீதோ வருமான வரித் துறையிலோ, வேறு முகமையிலோ எந்த வழக்கும் கிடையாது.

2016-17, 2017-18 ஆகிய நிதி ஆண்டுகளுக்கான எனது மகனின் வருமான வரிக் கணக்கை அந்த துறை ஏற்றுக் கொண்டுள்ளது. என் மீது எந்த வழக்கும் கிடையாது. என் மகன் மீது வழங்கப்பட்ட சோதனை ஆணை அடிப்படையில் என் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. என் வீட்டில் சிறிதளவு ரொக்கமும், தங்க நகைகளும் எடுக்கப்பட்டன. அதற்கு முறையாக கணக்கு காட்டப்பட்டு முடித்து வைக்கப்பட்டுவிட்டது. ஆனால், நானும் எனது குடும்பத்தாரும் சில மாதங்களாக தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளானோம். சோதனையின்போது மத்திய அரசின் பாதுகாப்பு படை ஏன் வரவழைக்கப்பட்டது என்பது இப்போதும் புதிராகத்தான் உள்ளது.

இவ்வாறு ராமமோகன ராவ் கூறினார்.

‘குட்கா ஊழலை ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டுவந்த பிறகு, காவல் துறை தலைவர் அசோக்குமார் பதவியில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டாரா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த ராமமோகன ராவ், “வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு நகலை காவல் துறை தலைவரிடமும் கொடுத்ததாக உறுதிப்படுத்தினர். அவர் தனது பதவிக்காலம் முடியும் முன்னரே பணி ஓய்வு பெற்றாரா என்பது நிச்சயமாக தெரியாது. அவர் சென்றதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x