Published : 14 Dec 2017 10:03 AM
Last Updated : 14 Dec 2017 10:03 AM
தமிழகக் காவல் துறையை விட பலமடங்கு பலம் குறைந்தது ராஜஸ்தான் மாநில காவல் துறை. இவ்வளவுக்கும் தமிழகத்தைவிட கிட்டத்தட்ட இருமடங்கு பரப்பளவு கொண்டது ராஜஸ்தான். குற்றங்களும் இரு மடங்கு அதிகம். இங்கே பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லை மட்டும் 1,040 கிமீ. பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் என அதிகளவிலான பிற மாநில எல்லைகளை அதிகமாகக் கொண்ட மாநிலமும்கூட. குற்றவாளிகள் சராசரியாக 3 மணி நேரத்தில் சர்வதேச எல்லையையும், 2 மணி நேரத்தில் மாநில எல்லையையும் கடந்து வெளியே சென்றுவிட முடியும்.
அதேபோல தமிழகத்துடன் ஒப்பிடும்போது குற்றங்களும் குற்றவாளிகளும் அதிகம். ஆனால், காவல் துறையின் ஆவணங்களில் பதியப்படும் குற்றங்கள் மிகக் குறைவு. உதாரணத்துக்கு கடந்த 2015-ல் தமிழகத்தின் க்ரைம் ரேட் 450 புள்ளிகள். அதுவே ராஜஸ்தானில் 289 மட்டுமே. உண்மையில் அந்த ஆண்டில் தமிழகத்தை விட பலமடங்கு குற்றங்கள் ராஜஸ்தானில் நடந்திருக்கும். ஆனால், முதல் தகவல் அறிக்கை பதியப்படுவதில்லை.
பொதுவாக கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்களில் விசாரணையில் ஓரளவுக்கு மேல் காவல் துறை அதிகாரிகள் தலையிட மாட்டார்கள். காரணம், குற்றவாளிகளின் மீதான பயம். ஜோத்பூர், ஜெய்ப்பூர் தவிர்த்து மாநிலத்தின் பிற பகுதிகளில் சட்டம் ஒழுங்கு மிக மோசம். உதய்பூர் ரேஞ்சில் சித்தூர்கார்க், கோட்டா சிட்டி, பரத்பூர், ஜோல்பூர் உள்ளிட்ட பல்வேறு பின்தங்கிய பகுதிகளில் காவல் துறையினர் நுழையவே முடியாது. இங்கெல்லாம் குற்றவாளிகளிடம் துப்பாக்கிகள் சர்வசாதாரணமாக புழங்குகின்றன. பெண்கள்கூட நாட்டுத் துப்பாக்கிகளை கையாள்கிறார்கள். இங்கெல்லாம் காவல் துறையினர் நுழைந்தால் துப்பாக்கி மட்டுமே பேசும்.
தற்போது தமிழக ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட பாலி மாவட்டத்தின் ஜெய்தாரன் பகுதி இருக்கும் ஜோத்பூர் ரேஞ்சில் மட்டுமே 338 பேர் கொள்ளையர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள் என தெரிவிக்கிறார் அங்கிருக்கும் காவல் துறை அதிகாரி ஒருவர்.
அவர் சொல்வது உண்மைதான். ராஜஸ்தான் காவல் துறையின் மொத்த எண்ணிக்கை 80,000 சொச்சம்தான். தமிழக காவல்துறையின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகம். ராஜஸ்தானில் ஜோத்பூர் மற்றும் ஜெய்ப்பூர் என இரு காவல் துறை ஆணையரகங்கள் மட்டுமே இருக்கின்றன. காவல் நிலையங்களின் எண்ணிக்கை 861 மட்டுமே. தமிழகத்தில் 1300-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இருக்கின்றன. ராஜஸ்தானின் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் எண்ணிக்கை 1,256, எஸ்.ஐ-க்களின் எண்ணிக்கை 4,415. தமிழகத்தில் இன்ஸ்பெக்டர்களின் எண்ணிக்கை 2,787, எஸ்.ஐ-க்களின் எண்ணிக்கை 9,731. இது கிட்டத்தட்ட ராஜஸ்தானைவிட மூன்று மடங்கு அதிகம்.
தமிழகத்தில் ஒட்டு மொத்த மாநிலமும் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் தலா ஒரு ஐ.ஜி. நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியாக எஸ்.பி. உண்டு. தமிழக காவல் துறையை ஆயிரம் குறைகள் சொன்னாலும் வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் முன்னணியில் இருக்கிறது.
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் காவல் துறையினர் மீது கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்துவது சகஜமான விஷயம். தமிழகத்தில் காவல் துறையினர் மீது அவ்வளவு சீக்கிரம் கை வைத்துவிட முடியாது. ஆனால், இதே நினைப்பில் வட மாநிலங்களுக்கு குறைந்த எண்ணிக்கையிலும் குறைந்தளவு பாதுகாப்பிலும் காவலர்களை அனுப்புவது தவறான அணுகுமுறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT