Published : 27 Dec 2017 03:10 PM
Last Updated : 27 Dec 2017 03:10 PM
மதுரையில் பூட்டிய வீடுகளை கண்காணித்து திருடுவது அதிகரித்து வருவதாக பாதிக்கப்பட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரை நகர் காவல் எல்லையில் 3 மகளிர் காவல் நிலையங்கள் உட்பட 21 காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 16 காவல் நிலையங்களில் மட்டும் குற்றப்பிரிவுக்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் போலீஸார் பணிபுரிகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நகர் காவல் எல்லையில் இணைந்த அவனியாபுரம், திருநகர், திருப்பரங்குன்றம், மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலையங்களில் குற்றப்பிரிவை அருகில் உள்ள குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் கூடுதலாக கவனிக்கின்றனர்.
பிற காவல் நிலையங்களை ஒப்பிடும்போது, அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளைக் கொண்ட தல்லாகுளம், அண்ணா நகர், கூடல்புதூர் ஆகிய காவல் நிலையங்கள் மதுரை புறநகர் காவல் எல்லையையொட்டிய பகுதியாக இருக்கின்றன. இக்காவல் நிலைய எல்லையில் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்தாலும், பெரும்பாலும் பூட்டி இருக்கும் வீடுகளை கண்காணித்து நகை, பணம் திருடுவது அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
விரிவாக்கப் பகுதிகளில் வீடுகள் நெருக்கமின்றி, இருப்பதால் பகல் நேரத்தில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு இரவில் கைவரிசை காட்டு வதற்கு கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைகிறது. அவனியாபுரம், கூடல்புதூர், அணணா நகர், திருப்பரங்குன்றம் போன்ற காவல் நிலையங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் 1500-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இது போன்ற சூழலில் பூட்டிய வீடுகளில் நகை உட்பட விலை உயர்ந்த பொருட்களை வைத்துவிட்டுச் செல்ல தயக்கமாக உள்ளதோடு, இரவில் தனியாக வசிக்கவும் அச்சமாக உள்ளது என பாதிக்கப்பட்டோர் கூறுகின்றனர்.
இது குறித்து தனியார் நிறுவன ஊழியர் கருத்தபாண்டி என்பவர் கூறியது:
நான் வண்டியூர் பகுதியில் வசிக்கிறேன். ரிங் ரோடு அருகே இருப்பதால் திருடர்கள் தப்பிச் செல்வதற்கு வசதியாக உள்ளது. எனவே ரிங் ரோடு- வண்டியூர் சந்திப்பில் போலீஸ் ‘பீட்’ போடவேண்டும். பிற காவல் நிலையங்களைவிட, போலீஸார் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும். போலீஸாரின் நடமாட்டம் இருந்தால் கொள்ளையர்களுக்கு பயமிருக்கும். சில நாட்களுக்கு முன்பு யாகப்பா நகரில் மருந்துக் கடை உட்பட பல்வேறு கடைகளில் மாமூல் கேட்டு, கொடுக்க மறுத்த கடைகளை அடித்து நொறுக்கிய ரவுடிகள் ரிங் ரோடு கருவேல காட்டுக்குள் பதுங்கினர். போலீஸார் பல மணி நேரம் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
அண்ணா நகர் உட்பட விரிவாக்கப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் போலீஸார் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். புறநகர் பகுதியில் வெளியூர் செல்பவர்களின் வீடுகளை கண்காணிக்கவும், காவல் நிலையத்திற்கு செல்போன் மூலம் எளிதில் தகவல் தெரிவிக்கவும் வசதியாக மாவட்ட காவல் துறை சார்பில், ‘மதுரை காவலன்’ என்ற புதிய ஆன்லைன் செயலி கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதியை நகரிலும் ஏற்படுத்தினால் பொதுமக்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
இது குறித்து குற்றப்பிரிவு போலீஸார் கூறியதாவது:
மதுரை நகரில் திருட்டு, வழிப்பறியை தடுக்க, இரவு, பகல் ரோந்து அதிகரிக்கப்படுகிறது. படிப்படியாக குற்றச் சம்பவங்கள் குறைந்து வருகிறது. கூடல் புதூர் பகுதியில் இரவில் பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டும் இருவரை சிசிடிவி மூலம் கண்காணித்து சுற்றி வளைத்தோம். ஒருவர் சிக்கினார். சிலர் அடையாளம் காணாத முடியாதவாறு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். இது போன்றவர்கள் சிறுவர்களுக்கு பண ஆசைகாட்டி பயன்படுத்துகின்றனர்.
பெரும்பாலான குற்ற வழக்கில் 18 வயத்துக்குட்பட்டோரே அதிகம். குடியிருப்பு பகுதியினர், வர்த்தக நிறுவனத்தினர் சிசிடிவி கேமரா பொருத்துவதில் அக்கறை தேவை. இதன் மூலம் தங்களது பொருட்கள் மட்டுமின்றி பிறரின் திருட்டையும் தடுக்கலாம். தனி வீடுகளில் சிசிடிவி கேமரா அவசியம்.
வெளியூர் செல்வோர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். வெளியூர் செல்வோர் முடிந்தவரை விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைப்பதை தவிர்க்கலாம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT