Last Updated : 05 Dec, 2017 12:10 PM

 

Published : 05 Dec 2017 12:10 PM
Last Updated : 05 Dec 2017 12:10 PM

ஜெ.ஜெயலலிதா எனும் நான்..!- புதிர் வாழ்க்கை... சதி வாழ்க்கை!

யார் என்ன சொன்னாலும் சரி... தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமை என்றால் சட்டென்று நினைவுக்கு வருபவர் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா என்பதை, ஜெயலலிதாவைப் பிடிக்காதவர்கள் கூட ஒத்துக்கொள்வார்கள். ஆளுமை, துணிச்சல், தைரியம், தீர்க்கமான முடிவு, உறுதியாய் களம் காணும் வீரியம்... என ரவுண்டு கட்டி அரசியல் செய்த வீராங்கனை... ஜெயலலிதா.

எம்.ஜி.ஆர். இருந்தவரை, 'ஒன் மேன் ஆர்மி' என இருந்த அதிமுகவை சிந்தாமல் சிதறாமல், தன் பக்கம் திருப்பி, 'ஒன் வுமன் ஆர்மி' யாய் கட்டிக்காபந்து செய்ததையெல்லாம் கடைசித் தொண்டன் இன்றைக்கும் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறான்.

சினிமாவில் இருந்து தொடங்கியதுதான் ஜெயலலிதாவின் வாழ்க்கை. முதல் படமான 'வெண்ணிற ஆடை' படத்திலேயே, அத்தனை யதார்த்தமாக, ஒவ்வொரு காட்சிக்குத் தக்கபடியாய், கண்களை உருட்டி, மெளனப் பார்வை பார்த்து, ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, அருமையான ஓப்பனிங் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டார்.

ஆனால், 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்கத் தொடங்கியதுதான் ஜெயலலிதாவின் பண்பட்ட நடிப்பை வெளிக்காட்ட முடியாமல் போய்விட்டதோ என்று என் நண்பர், அடிக்கடி புலம்பிக் கொண்டே இருப்பார். காரணம்... அவர் ஜெயலலிதாவின் பரம ரசிகன்.

‘’ஜெயலலிதாவையும் சரி... சரோஜாதேவியையும் சரி... சிவாஜி கூட நடிச்ச படங்களை எடுத்துக்கிட்டா, ரெண்டுபேருமே நடிப்புல புது உச்சம் தொட்டிருப்பாங்க. 'எங்க மாமா', 'எங்கிருந்தோ வந்தாள்', 'அவன் தான் மனிதன்', 'தெய்வமகன்', 'கலாட்டா கல்யாணம்', 'பட்டிக்காடா பட்டணமா'னு சிவாஜி கூட நடிச்ச ஜெயலலிதா படங்கள் எல்லாத்துலயுமே நடிப்புல பிரமாதப்படுத்தியிருப்பாங்க. கவனிச்சுப் பாத்தா தெரியும்.

அதேபோல 'வந்தாளே மகராசி', 'வைரம்'னு படங்கள்லயும் நடிப்புல பிய்ச்சு உதறியிருப்பாங்க. ஆனாலும் சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா, வாணிஸ்ரீ மாதிரி நல்ல நடிகைன்னு பேரெடுக்க விடாம ஏதோவொண்ணு தடுத்துச்சு அவங்களை” என்று அடிக்கடி புலம்புவார் அவர்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, அவரின் தெளிந்த நடிப்பு, புத்தக ஆற்றல், ஆழ்ந்த அறிவு எல்லாமே தனித்துவம் வாய்ந்ததாகவே எடுத்துக் கொண்டு அவரைப் பார்க்க வேண்டும்.

எம்.ஜி.ஆருடன் நடித்ததும் அவர் கட்சிக்குள் வந்ததும் எவரின் திட்டமிடல் என்பது இருக்கட்டும். எம்ஜிஆரின் திட்டமிடல்தான் என்றால், அவரை ஜெயலலிதா ஏமாற்றிவிட்டார். ஜெயலலிதாவின் ஆசை அதுதான் என்றால் அதை எம்ஜிஆர் நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டார். இதுதான் உண்மை.

இந்த இடத்தில் இருந்துதான் ஜெயலலிதாவின் தனிமனித வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று பின்னிக் கொண்டன. சிக்கலாகின. இவை அனைத்துக்கும் காரணம் சசிகலா வகையறா என்று சொல்லப்பட்டது. சொல்லப்படுகிறது.

இங்கிருந்துதான் ஜெயலலிதா எனும் நடிகையின், ஜெயலலிதா எனும் அரசியல் கட்சித் தலைவரின் , ஜெயலலிதா எனும் போர்க்குணம் நிறைந்த நாயகியின் ஆளுமைகளில் சந்தேகப்பட்டு, புரியாத புதிர் என்று குமைந்து போகிறான் கட்சியின் கடைசிநிலைத் தொண்டன்.

அன்றைக்கு ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக சந்திரலேகாவை இருக்கச் செய்தார் எம்ஜிஆர். சந்திரலேகா மூலம் நடராஜனும் நடராஜன் மூலமாக சசிகலாவும் பழக்கமான பிறகு சந்திரலேகாவை கழற்றிவிட எது அல்லது யார் காரணம். பிறகு சந்திரலேகா எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டது யாரால், ஏன், எதற்காக?

எம்ஜிஆரால் செயல்படமுடியவில்லை. எனவே அவரின் ஆட்சியை டிஸ்மிஸ் செய்யுங்கள் என்று ராஜீவ்காந்திக்கு யார் வற்புறுத்தி கடிதம் எழுதி அனுப்பியது? பின்னாளில் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சி இரண்டானதும் அதையடுத்து ஜானகி அம்மாள், பெருந்தன்மையாய் விட்டுக் கொடுத்ததும் ஒன்றுபட்ட கட்சியாகி, ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்த போது,, நடந்த ஐந்து வருட கோலத்துக்குக் காரணம் யார்?

‘ஆனானப்பட்ட கருணாநிதியையே எதிர்க்கிற துணிச்சல் இந்த அம்மாவுக்குத்தாம்பா இருக்குது’ என்று தமிழக மக்கள் வீரதீரப் பெண்மணியாய் ஜெயலலிதாவை நினைக்க... தன் அண்ணன் மகனை விட்டுவிட்டு, அண்ணன் மகளைப் புறக்கணித்துவிட்டு, 30 வயதைக் கடந்த சசிகலா குடும்பத்து சுதாகரனை வளர்ப்புமகனாக தத்தெடுத்த விழா... ஜெயலலிதாவின் ஒட்டுமொத்த வாழ்விலும் கரும்புள்ளியானது.

தன் கணவரையே தூக்கியெறிந்துவிட்டு, சசிகலா ஜெயலலிதாவுடனே இருந்தார். 'பாவம்பா ஜெயலலிதா. இந்த அம்மாவை வைச்சிக்கிட்டு, சசிகலா குடும்பமே தமிழ்நாட்டை சூறையாடுது' என்றார்கள் மக்கள். 'பதவியில் இருந்துகொண்டு ஜெயலலிதா, இவர்களையெல்லாம் துணைக்கு வைத்துக் கொண்டு கூட்டுச்சதியில் ஈடுபட்டார்' என்றது உச்ச நீதிமன்றம். ஆனால் இன்றைக்கு சசிகலா ஜெயிலில் இருக்க, தினகரன் கட்சி ஆபீஸ் பக்கமே வரமுடியாத நிலையாகிவிட, ‘சசிகலாவைப் பயன்படுத்திக்கிட்ட ஜெயலலிதா, அவங்களை பாதுகாக்கவே இல்ல’ என்று திவாகரன் உட்பட பலரும் மைக் பிடித்துப் பேசுவது சாதாரணமானதுதானா. அல்லது வழக்கம் போல் இதிலும் உள்குத்து இருக்கிறதா.

என் நண்பர்... தீவிர அதிமுககாரர். அவர் அடிக்கடி சொல்லுவார்... ''எம்.ஜி.ஆர் மட்டும் இன்னும் ரெண்டு வருஷம் உயிரோடு இருந்திருந்தா, அவரோட கட்சியை இவங்களே சேர்ந்து கலைக்கறதுக்குக் காரணமா இருந்திருப்பாங்க. நல்லவேளை... எம்.ஜி.ஆர். செஞ்ச புண்ணியம். அதுக்கு முன்னாடியே போய்ச்சேர்ந்துட்டாரு'' என்றார்.

அதேபோல், இப்போதும் அந்த நண்பர் சொல்லிப் புலம்புகிறார்... ''ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தா, குன்ஹா கொடுத்த தீர்ப்பு சரிதான்னு சுப்ரீம் கோர்ட் சொன்னதுக்குப் பிறகு, அவங்க ஜெயிலுக்குப் போயிருக்கணும். மனசளவுல இன்னும் துவண்டு போயிருப்பாங்க. நல்லவேளையா... அதுக்குள்ளே போய்ச் சேந்துட்டாங்க'' என்கிறார்.

இங்கேயும் நீளுகின்றன புதிர்களின் கரங்கள். ஜெயலலிதா உடல்நலமில்லாமல்தான் இருந்தாரா? அப்படியெனில் செப்டம்பர் 22-ம் தேதி சொன்னது ஒருவிதமாகவும் அடுத்து 'இல்ல இல்ல... இதுதான் காரணம்' என்று மாற்றிச் சொன்னதும் ஏன். ஜெயலலிதா உடல்நலமில்லாமல் இருந்தாரா? என்ன உடம்புக்கு? எதனால் அன்றைக்கு சீரியஸ் கண்டீஷன்?

ஆளுநர் துவங்கி ஏரியா கவுன்சிலர் வரை, 'பாத்தேன்... பாத்தேன்' என்று சொன்னார்களே. அப்போலோவில் யாருமே பார்க்காத நிலையில், ஏனிந்த பாத்தேன் பில்டப்?

கையெழுத்தில் குளறுபடி, சாதாரண இட்லி விஷயத்தில் ஏராள தாராளப் பொய்கள், அப்போலோ தொடங்கி எய்ம்ஸ் வரைக்கும் விமானத்தில் பறந்து வந்த வெளிநாட்டு டாக்டர்கள் வரைக்கும் முன்னுக்குப்பின் முரணான விளக்கங்கள்... என அடுத்தடுத்து நடந்த ஒவ்வொரு விஷயங்களும் செயல்களும் சந்தேக மரணம் என்பதாகவே புலம்புகிறார்கள் பொதுமக்கள்.

'மக்களுக்காக நான்... மக்களுக்காகவே நான்' என்பதைக் கூட, கம்பீரமாக, உத்வேகத்துடன் கணீரென்று சொல்கிற ஆளுமைக்குச் சொந்தக்காரரான ஜெயலலிதா, எப்படி இப்படி ஒருகுடும்பத்தில் சிக்கினார்... சிக்க வைத்தது எது... அவர்கள் ஆட்டுவிக்கும்படிதான் இவர் ஆடினார் என்றால், ஆளுமைக்குணம் கொண்டவர் யார்?

அவருக்கென ஓர் வாழ்க்கை, துணை, உறவுகள் இருந்திருந்தால்...? என்றொரு கேள்வி எல்லோரிடமும் உண்டு. இந்தக் கேள்விதான் ஜெயலலிதா மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் பிரியத்தின் சாயல்.. அன்பின் பகிர்வு.

யோசித்துப் பார்த்தால்... தமிழக அரசியலில் கோலோச்சிய மாபெரும் அரசியல் தலைவர் ஒருவரின் மரணம் சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பது இதுவே முதல்முறை.

புதிர் போட்டு விளையாடலாம். புதிருடனேயே வாழலாமா. வாழ்க்கை திறந்த புத்தகம் என்று சொன்ன தலைவர்களெல்லாம் உண்டு. அப்படி திறந்த புத்தகமாக இருக்க வேண்டாம். புதிரோ குழப்பமோ இல்லாத வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாமே என்பதுதான் 'அம்மா' என்று அவரை அன்புடன் அழைத்த, நினைத்த, நினைத்துக் கொண்டிருக்கிறவர்களின் ஒருவித விருப்பம். ஏக்கம். துக்கம்!

'ஜெ.ஜெயலலிதாவாகிய நான்' என்கிற குரல் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. கட்சியோ ஆட்சியோ பதவியோ பணமோ என எதையும் எதிர்பார்க்காமல், ஜெயலலிதாவின் ஆத்மா அமைதியாகணும் என நினைப்பதுதான் உண்மைத் தொண்டனின் ஆசை, விருப்பம், பிரார்த்தனை!

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x