Published : 20 Aug 2023 06:02 PM
Last Updated : 20 Aug 2023 06:02 PM
சென்னை: “மதுரை அதிமுக மாநில மாநாட்டில், தமிழகத்துக்கு ஒன்றிய பாஜக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒரே ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்ற வேண்டும். இதற்கு நீங்கள் தயாரா?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக இளைஞர், மாணவர், மருத்துவ அணிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த போராட்டத்தை திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் பேசியது: "மாணவர் ஃபயாஸ் என்னை எதிர்த்து கேள்வி கேட்டார். அவரை அழைத்துவந்து இந்த மேடையில் பேச வைத்திருக்கிறேன். அந்த தைரியம் எனக்கு இருக்கிறது.
ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய அம்மாசியப்பனுக்கு மிரட்டல் விடப்படுகிறது. இந்த மேடையில் கூறுகிறேன்... சேலம் உருக்காலையில் பணியாற்றும் அம்மாசியப்பனின் வேலைக்கு ஏதாவது பங்கம் விளைவித்தால், ஏதாவது பிரச்சினை செய்தால், நாங்கள் விடமாட்டோம். ஆளுநருக்கு தமிழக மக்களைப் பற்றி தெரியாது. நாங்கள்தான் வாக்குறுதி கொடுத்தோம். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக முதல்வர் செய்துகொண்டிருக்கிறார். ஆட்சி அமைத்து முதல்வராக பொறுப்பேற்ற ஒரே மாதத்தில், ஓய்வபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களை சந்தித்தனர். நீட் தேர்வினால், எவ்வளவு பாதிப்புகள் என்பது குறித்த அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நீட் விலக்கு மசோதாவுக்கு ஆதரவாக அதிமுகவினரும்தான் வாக்களித்தனர். 234 உறுப்பினர்களில், 230 பேர் வாக்களித்தனர். பாஜகவைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் மட்டும் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தனர். அதன்பிறகு ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பினார். அதிமுக ஆட்சியிலும் இதேபோல் ஒரு சட்ட மசோதாவை கொண்டு வந்தனர். அது எங்கே போனது என்றே தெரியவில்லை. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அதிமுகவினர் பொய் சொல்லிக் கொண்டே இருந்தனர்.
ஆனால், தமிழக முதல்வர் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய உடனே, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதையும் ஆளுநர் டெல்லி அனுப்பாமல் வைத்திருந்தார். முதல்வர் தொடர்ந்து அமைச்சர்களை அனுப்பி, தற்போது குடியரசுத் தலைவரிடம் அந்த மசோதா இருக்கிறது. ஆனால், எந்த பதிலும் இல்லை.
ஒருசிலர் மருத்துவப் படிப்பு இல்லையென்றால், வேறு படிப்பே இல்லையா என்று கேட்கின்றனர். அதை சொல்வதற்கு அவர்கள் யார்? மருத்துவராக ஆசைப்பட ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி உரிமை உள்ளது. ஆனால், மருத்துவப் படிப்புக்காக கொண்டு வரப்பட்டுள்ள தகுதியற்ற ஒரு தேர்வுதான் இந்த நீட். இதை என்று ஒழிக்கிறோமோ அன்றைக்குத்தான் தமிழக மாணவர்களுக்கு ஒரு விடியல். அதை திமுக கண்டிப்பாக களத்தில் இறங்கி செய்யும்.
இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஓர் ஆரம்பம், இது முடிவல்லை. ஒவ்வொரு கல்லூரிக்குள்ளும் இது செல்ல வேண்டும். ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். மாடு பிடிப்பதற்காக சண்டை போட்டோம், ஒரு மாணவரின் உயிருக்காக சண்டை போடமாட்டோமா? எனவே, மாணவர்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தமிழக முதல்வர் கண்டிப்பாக இந்த நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் ஒருவர், பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாணவர்கள் தற்கொலை செய்வதெல்லாம் ரொம்ப சாதாரண விசயம் என்று கூறுகிறார். இந்த மாணவர்கள் எல்லாம் பொதுத் தேர்வில் தோல்வியைடந்தா தற்கொலை செய்து கொண்டனர்? தங்கை அனிதா பொதுத் தேர்வில் எத்தனை மதிப்பெண் தெரியுமா? 1200க்கு 1176 மதிப்பெண்கள். மாணவர்கள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டனர். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைக்கு இதுபோல் நிகழ்ந்தால் இப்படி பேசுவீர்களா?
தமிழகத்துக்கு பாஜக என்ற ஒரு கட்சியே தேவையற்றது. இந்த நிலை தொடர்ந்து கொண்டே போனால், ஒன்றியத்தில் ஆளும் பாஜகவுடன் சேர்த்து அதிமுகவையும் தமிழக மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள். மதுரையில் அதிமுக மாநாடு நடந்துகொண்டிருக்கிறது. அங்கு தீர்மானம் நிறைவேற்றப்படும். நான் ஒரே ஒரு சவால் விடுகிறேன். அதிமுக மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுங்கள். ஒன்றிய பாஜக அரசு தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒரே ஒரு தீர்மானம் மட்டும் போட வேண்டும். எடப்பாடி பழனிசாமி அவர்களே, உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இதில் நான் அரசியல் செய்யவில்லை. உங்கள் கட்சியின் இளைஞரணி அல்லது மாணவர் அணி செயலாளரை அனுப்பி வையுங்கள். நாங்களும் வருகிறோம். அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்துக் கொள்ளலாம்.
அனைவரும் சேர்ந்து நேராக டெல்லிக்குச் செல்வோம். பிரதமர் இல்லத்துக்கு முன்பு அமர்ந்துவிடுவோம். அப்படி செய்து நீட் தேர்வு ரத்தானால், அந்த முழு பெருமையையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். அதிமுகவால்தான் நீட் தேர்வு ரத்தானது என்று நானும் ஒப்புக் கொள்கிறேன். இதற்கு நீங்கள் தயாரா?" என்று உதயநிதி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT