Published : 20 Aug 2023 04:25 PM
Last Updated : 20 Aug 2023 04:25 PM
திருநெல்வேலி: "தென்தமிழகத்தில் அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கினால், சாதிச் சண்டைகள், கந்துவட்டிக் கொடுமை, கிராமங்களுக்குள் நிலவக்கூடிய பிரச்சினைகள் தீண்டாமை இவையெல்லாம் தானாக சரியாகிவிடும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணி மண்டபத்தில், உள்ள அவரது உருவச்சிலைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "தென்தமிழகத்தைப் பொறுத்தவரை, வேலைவாய்ப்புகள் அதிகமாக ஏற்படுத்த வேண்டிய ஓர் இடமாக இருக்கிறது. தொழில் துறை சார்ந்த நிறைய வேலைவாய்ப்புகளை கொண்டு வர வேண்டும். குறிப்பாக இந்தப் பகுதிகளில் பொறியியல் படிப்புகளை படித்துவிட்டு மாணவர்கள் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர்.
அதைத்தான், இந்த என் மண் என் மக்கள் யாத்திரையில் மிக முக்கியமான விஷயமாக நாங்கள் பார்ப்பது. நிறைய புத்திக்கூர்மையான குழந்தைகள் படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் இந்தப் பகுதிகளில் இருக்கின்றனர். எனவே, முதலில், தென்தமிழகத்துக்கு அதிகமான வேலைவாய்ப்புகளைக் கொண்டு வர வேண்டும்.
பல நிறுவனங்கள், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளை நோக்கியே செல்கின்றன. அரசு இந்தப் பகுதிகளில் வரிச்சலுகை கொடுத்து, நிறைய வேலைவாய்ப்புகளை இங்கு கொண்டு வரவேண்டும். தொழில்முனைவோர்களுக்கு இதுபோன்ற சலுகைகளைக் கொடுக்கும்போது, சின்ன சின்ன பிரச்சினைகளுக்கான சண்டைகளும், பெரிய பிரச்சினைகளாக இருக்கக்கூடிய சாதிச் சண்டைகள், கந்துவட்டிக் கொடுமை, கிராமங்களுக்குள் நிலவக்கூடிய பிரச்சினைகள் தீண்டாமை இவையெல்லாம் தானாக சரியாகிவிடும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT