Published : 20 Aug 2023 03:54 PM
Last Updated : 20 Aug 2023 03:54 PM
மதுரை: அதிமுக தொண்டர்கள் வந்த வாகனங்களால் மதுரை சுற்றுச் சாலை போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டது. நீண்ட வரிசையில் அணிவகுத்த வாகனங்களால் போக்குவரத்தை சீரமைக்க போலீஸார் திணறிய சூழல் ஏற்பட்டது.
மதுரை விமான நிலையம் அருகே வலையங்குளம் பகுதியில் அதிமுக மாநாடு இன்று காலை தொடங்கியது. இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி காலை 8.45 மணிக்கு அதிமுக கட்சி தொடங்கி 51-வது ஆண்டை எட்டியதை நினைவூட்டும் வகையில் 51 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியினை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இம்மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து அதிமுகவினர் வாகனங்களில் வந்து நேற்று இரவு முதலில் மதுரையில் குவிந்தனர். மாநாடு நடக்கும் பகுதியில் சாலையோரங்களில் தங்களது வாகனங்கள் நிறுத்திவிட்டு காலை முதலே மாநாட்டு திடல் பகுதியில் கூடினர். வேலம்மாள் மருத்துவமனையில் இருந்தும், ராஜபாளையம், தூத்துக்குடி சாலையில் சுமார் 2 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
மாநாட்டு பந்தலுக்கு அருகே ஏற்பாடு செய்த பார்க்கிங் பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி இருந்தன. இந்நிலையில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாநாட்டு திடலில் காலை கொடி யேற்றிய நேரத்தில் சாலைகளிலும், மாநாட்டு திடலிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டதால் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. இருப்பினும், நான்கு வழிச் சாலையில் அரசு, தனியார் பேருந்துகள், கார், வேன்களும் வழக்கம் போன்று அனுமதிக்கப்பட்டன.
மாநாட்டுக்கு வந்த வாகனங்களும், வழக்கமான வாகனங்களும் நீண்ட வரிசையில் சாலையில் காத்து நின்றன. மதியத்திற்கு மேல் பக்கத்துக்கு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். இது போன்ற சூழலில் காலை, மாலையில் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே ஏற்பட்டது. அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் அலைகடலென திரண்டது.
போலீஸ் பாதுகாப்பு: தென்மண்டல ஐஜி நாரேந்திரன் நாயர் ஆலோசனையின் பேரில், டிஐஜி ரம்யா மேற்பார்வையில் காவல் கண் காணிப்பாளர் சிவ பிரசாத் தலைமையில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸார் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் இருமுறை மாநாட்டு மேடை ஆய்வு செய்யப்பட்டு, மாநாட்டு குழுவிடம் ஒப்படைத்தனர்.
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து கூடுதல் போக்குவரத்து போலீஸார் வரவழைக்கப் பட்டு இருந்தனர். இவர்கள் மாநாட்டு திடல், நான்கு வழிச்சாலை, சந்திப்பு பகுதிகளில் போலீஸார் நிறுத்தப்பட்டு, போக்குவரத்துகள் சீரமைக்கப்பட்டன. மாநாட்டு திடல் பகுதியில் வாகன போக்குவரத்தை சீரமைப்பதில் போலீஸார் திணறினர். மேலும், இன்று முகூர்த்த நாள் என்பதாலும் நான்கு வழிச்சாலையில் வாகன போக்குவரத்து நெருக்கடி இருந்தது என காவல்துறையினர் தரப்பில் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT