Published : 20 Aug 2023 12:27 PM
Last Updated : 20 Aug 2023 12:27 PM
சென்னை: "நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசின் ஆலோசனையைப் பெற்ற பிறகு குடியரசுத் தலைவர்தான் இதற்கு ஒப்புதல் தரவேண்டும். அவருக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவருக்கு போஸ்ட்மேன் வேலைதான். நாம் அனுப்புவதை டெல்லிக்கு அனுப்பி வைக்கவேண்டும்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் திமுக மேற்கு மாவட்ட பகுதி செயலாளர் ராமலிங்கம் இல்ல திருமண விழா இன்று (ஆக.20) நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, திருமணத்தை நடத்திவைத்து மணமக்களை வாழ்த்தினார். திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "இன்று தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் நமக்கு ஏன் ஏற்பட்டது?
இன்று மணக்கோலம் பூண்டுள்ள இருவரும் மருத்துவர்கள். இவர்கள் நீட் தேர்வெழுதி தேர்ச்சிப் பெற்று மருத்துவராக வரவில்லை. அப்போதெல்லாம் நீட் கிடையாது. அதனால், ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்கள், நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், யாராக இருந்தாலும், பனிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைப் பெறலாம் என்ற நிலை இருந்தது. இப்போது நீட் தேர்வு ஒன்றை எழுதினால்தான், அதில் தேர்ச்சிப் பெற்றால்தான், மருத்துவராக முடியும் என்றொரு நிலை இன்றைக்கு வந்திருக்கிறது.
நீட் தேர்வை கொண்டு வந்த சமயத்திலும் நாம் அதை கடுமையாக எதிர்த்தோம். எனவேதான், அது நிறைவேற்றப்படாத ஒரு நிலையில் இருந்தது. பின்னர், ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, நீட் தேர்வை கொண்டு வருவதற்கான முயற்சியிலே ஈடுபட்டார்கள். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதுகூட, நீட் தேர்வை கொண்டு வரக்கூடாது என்று அழுத்தம் கொடுத்து, நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து, அந்த தீர்மானத்தை நிறைவேற்றி அந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி குடியரசுத் தலைவருக்குச் சென்றது.
ஆனால், குடியரசுத் தலைவருக்கு சென்ற தீர்மானம், ஆளுங்கட்சியாக அதிமுக இருந்தபோது திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பி அனுப்பியபோதுகூட ஆளுங்கட்சியான அதிமுக அதை வெளியில் சொல்லவில்லை. சட்டமன்றம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் கூட சொல்லவில்லை.நீதிமன்றம் மூலமாக நாம் தெரிந்துகொண்டு அதன்மூலம் அந்த பிரச்சினையை உடனடியாக கொண்டு வந்தோம். அதிமுக ஓராண்டு காலமாக வெளியே சொல்லாமல் இருந்த காரணத்தால், அந்த மசோதா செல்லுபடியாகாத நிலைக்கு சென்றுவிட்டது.
அதனால்தான், தேர்தல் நேரத்தில் நாம் கூறினோம். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சியில் முழுமையாக ஈடுபடுவோம், எதிர்ப்போம், அதை ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவதாக கூறினோம். அதன்பிறகு வெற்றிபெற்று ஆட்சிக்கு வருகிறோம். தமிழகத்துக்கு நீட் விலக்கு கோரி சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வருகிறோம். அனைத்து கட்சிகளும் ஆதரித்தது. எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக கூட ஆதரித்தது.
மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். ஆளுநரிடம் இருந்தது. இந்த ஆளுநர் அல்ல, ஏற்கெனவே இருந்த ஆளுநர். ஆளுநர் அனுப்பவில்லை. அதன்பிறகு ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நாம் நடத்தி அதன்பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது இருக்கும் ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். அவர் அனுப்பாமல் ராஜ்பவனில் வைத்திருந்தார்.
ஆளுநர் கேட்ட சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் அளித்து மீண்டும் அவருக்கு அனுப்பினோம். இரண்டாவது முறையாக அனுப்பிய பிறகு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது அது குடியரசுத் தலைவரிடம் உள்ளது. எனவே, அதை முடிவு செய்ய வேண்டியது யார்? குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் ஆலோசனையைப் பெற்ற பிறகு குடியரசுத் தலைவர்தான் இதற்கு ஒப்புதல் தரவேண்டும்.
அவருக்குத்தான் அனைத்து அதிகாரமும் உள்ளது. ஆளுநருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவருக்கு போஸ்ட்மேன் வேலைதான். நாம் அனுப்புவதை டெல்லிக்கு அனுப்பி வைக்கவேண்டும். ஆனால், திடீரென்று சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற சில மாணவர்களையும் பெற்றோர்களையும் அழைத்து ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை ஆளுநர் நடத்தியிருக்கிறார். அப்போது சேலத்தைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஒருவர் வெளிப்படையாக, துணிச்சலாக, தைரியமாக, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால், ஆளுநர், நான் மசோதாவை அனுப்பிவிட்டேன். எனக்கு அதிகாரம் இருந்தால் நான் ஒப்புதல் கொடுக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கமாட்டேன் என்று ஆளுநர் வெளிப்படையாக கூறியுள்ளார். இதையெல்லாம் கண்டித்துதான் நீட் விலக்கு கோரிதான் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறுகிறது" என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT